கொரோனா நோயாளிகளுக்கு ரத்தம் உறையும் பிரச்சனை ஏற்படுவது ஏன்?

Webdunia
புதன், 20 மே 2020 (16:33 IST)
தீவிரமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 30 சதவிகிதம் பேருக்கு அபாயகரமான முறையில் ரத்தம் உறையும் பிரச்சனை உள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

துரொம்பாசிஸ் என்று அழைக்கப்படும் இந்த ரத்தம் உறையும் பிரச்சனையால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

நுரையீரல் வீக்கம் கொரோனா வைரஸால் ஏற்படும் வழக்கமான பாதிப்பு. இதே போல உலகில் உள்ள பல கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வேறு பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அவற்றில் சில மிகவும் ஆபத்தானவை.

டந்த மார்ச் மாதம் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வந்த நேரத்தில் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் கொரோனா நோயாளிகள் பலருக்கு ரத்தம் கட்டும் பிரச்சனை இருப்பது தெரியவந்தது.

இதில் சிலருக்கு நுரையீரலில் நூற்றுக்கணக்கான சிறிய ரத்த கட்டிகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

கொரோனா வைரஸால் உருவாகும் ரத்த கட்டிகள் பெரும்பாலும் காலில் உருவாகும். ஒரு கட்டத்தில் இந்த கட்டிகள் துண்டுகளாக வெடித்து நுரையீரலுக்கு நகரும்போது, ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படலாம். இது உயிருக்கே ஆபத்தாக மாறலாம்.

கொரோனா வைரஸால் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்ட பலர் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகின்றனர். ஆனால் நிமோனியா காய்ச்சலை பரிசோதிக்க மேற்கொள்ளப்படும் ஸ்கேன்களின் மூலம் நுரையீரலில் ரத்தக் கட்டுகள் இருப்பது தெரியவருகிறது. எனவே கொரோனா வைரஸ் சிகிச்சையின் மூன்றாம் கட்டத்திலேயே ரத்த கட்டுகள் குறித்து தெரியவருகிறது.

சமீபமாக பிரிட்டனில் கொரோனா மரணங்கள் அதிகரிக்க இந்த ரத்த கட்டு பிரச்சனை முக்கிய காரணமாக இருக்கும் என லண்டனின் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த பேராசிரியர் ரூபென் ஆர்யா கூறுகிறார்.

குறிப்பாக கொரோனா வைரஸால் தீவிரமாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள பெரும்பாலான நோயாளிகளுக்கு நுரையீரலில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு, ரத்தம் உறைந்திருப்பதும் சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

ஐரோப்பாவில் 30 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு ரத்தம் கட்டும் பிரச்சனை இருக்கிறது என்று சில ஆய்வுகளின் முடிவுகள் கூறுகின்றன. ஆனால் உண்மையில் ஸ்கேன் செய்து பார்த்தால் 30 சதவீதத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகளுக்கு ரத்தக் கட்டு பிரச்சனை இருக்கும் என பேராசிரியர் ஆர்யா கூறுகிறார்.

கொரோனா நோயாளிகளின் ரத்தம் ஏன் உறையும் தன்மையை அடைகிறது என்பது குறித்து லண்டன் மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ரத்தம் உறைந்து அதன் பிசுபிசுப்பு தன்மை அதிகரிக்கும்போதே ரத்தக் கட்டு பிரச்சனைகள் ஏற்படும்.

ரத்தத்தில் இந்த மாற்றம் நிகழும்போதே நுரையீரல் கடுமையாக வீங்கும்.

தீவிரமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் ரத்தத்தில் இருந்து ஒரு வித ரசாயனம் வெளியேறுகிறது என்றும் பேராசிரியர் ஆர்யா குறிப்பிடுகிறார். இவை அனைத்தும் சேர்ந்து இறுதியில் நோயாளியின் உடல் நிலையை மோசமடைய செய்கிறது.

ரத்தத்தில் பிசுபிசுப்பு தன்மை அதிகரிப்பது பல விதிமான உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது என பேராசிரியர் பீவர்லே கூறுகிறார்.

உலகம் முழுவதும் ரத்தம் கட்டும் பிரச்சனை ஏற்படும் இந்த நேரத்தில் ரத்தத்தை இயல்பான நிலைக்கு கொண்டுவர சில சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் எந்த சிகிச்சையும் நிச்சயம் பலன் அளிக்கும் என கூறமுடியாது.

எனவே தற்போது ரத்தத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான எல்லா முயற்சிகளையும், ஆராய்ச்சிகளையும், உலகம் முழுவதும் பல மருத்துவக் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன. இதற்கான மருந்துகளும் சோதனை கட்டத்தில் உள்ளன.

மேலும் ரத்தம் கட்டுவதைத் தவிர்க்க நுரையீரல் வீக்கம் அடைவதை தடுக்க வேண்டும். இதுவே தற்போதைக்கு உள்ள சிறந்த வழியாகும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்