டுவிட்டர் கருத்துச்சுதந்திரம்: இந்திய அரசுடன் மோதலா? KOO செயலிக்கு மாறும் அமைச்சர்கள்

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (16:44 IST)
இந்தியாவில் அரசுக்கு எதிரான விஷம கருத்துகளை பதிவிடுவதாகக் கூறி ஆயிரத்துக்கும் அதிகமான கணக்குகளை முடக்குமாறு டுவிட்டர் நிறுவனத்தை கேட்டுக் கொண்டிருந்த மத்திய அரசுக்கு அந்த நிறுவனம் பதில் அனுப்பியிருக்கிறது.

அதில், மத்திய அரசு கேட்டுக்கொண்டபடி எல்லா கணக்குகளையும் ஒட்டுமொத்த முடக்க முடியாது. வேண்டுமானால், அவதூறு மற்றும் விஷம தகவல்களை பதிவிடுவதாகக் கருதப்படும் கணக்கு வைத்திருப்போரின் பக்கங்களையோ பதிவுகளையோ இந்தியாவில் பார்க்க முடியாதவாறு கட்டுப்படுத்துகிறோம் என்று  டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இது தொடர்பாக அந்த நிறுவனம் தனது வலைப்பக்கத்தில் இந்திய அரசின் வேண்டுகோளை எந்த வகையில் ஏற்றுக்கொள்கிறோம் என்பதை விளக்கும் தகவல்களை  பதிவிட்டிருக்கிறது.
 
அதில் கருத்துச் சுதந்திர பதிவுகள் தொடர்பாக இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளருடன் பேச விரும்புவதாகக் டுவிட்டர் நிர்வாகம்  குறிப்பிட்டுள்ளது.
 
ஆனால், டுவிட்டர் நிறுவனத்தின் இந்த பதில் தொடர்பான விவரத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மின்னணு தொழில்நுட்பத்துறை அமைச்சகம், இந்த  விவகாரத்தில் அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் டுவிட்டர் நிர்வாகத்துடன் பேசவிருந்த சூழலில் அரசின் வேண்டுகோளின்படி எடுத்த நடவடிக்கை  தொடர்பான வலைபக்க பதிவை டுவிட்டர் பதிவிட்டிருப்பது அசாதாரணமானது என்று கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய அரசின் பதில் விரைவில்  பகிரப்படும் என்று மின்னணு தகவல் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.
 
இந்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 75 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பான தகவல்களை பதிவிடும் சிலர் அரசுக்கு எதிரான அவதூறு தகவல்களை பரப்புவதாகவும் அவர்கள்  டுவிட்டர் போன்ற சமூக ஊடக பக்கங்களை தவறாக பயன்படுத்துவதாகவும் இந்திய அரசு குற்றம்சாட்டியது.
 
இதன் தொடர்ச்சியாக விஷமத்தனமான தகவல்களை பரப்புவதாக 1,178 டுவிட்டர் கணக்குளை டுவிட்டர் நிர்வாகத்துடன் பகிர்ந்த இந்திய அரசு, அவற்றை நீக்க  வேண்டும் என்று கடந்த வாரம் கேட்டுக் கொண்டது.
 
இந்த நிலையில்தான் டுவிட்டர் நிறுவனம், 500க்கும் அதிகமான கணக்குகளை இந்தியாவில் மட்டும் அணுக முடியாத வகையில் முடக்கியிருப்பதாக தனது வலைபக்கத்தில் கூறியிருக்கிறது.
 
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதியும் அவரது அமைச்சரவை சகாக்களும் தங்களுடைய மக்கள் தொடர்பு மற்றும் கருத்துகளைப் பகிர்வதற்கு தீவிரமாக  பயன்படுத்தும் செயலியாக டுவிட்டர் உள்ளது.
 
ஆனால், அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்கும் நபர்கள் மீதான நடவடிக்கையில் டுவிட்டர் சரியாக செயல்படாததாகக் கருதிய அரசு, சமீப காலமமாக  கூ என்ற பெயரிலான இந்திய சமூக ஊடக பக்கத்தில் தங்களுடைய கருத்துகளை பகிரத் தொடங்கியிருக்கிறார்கள். "KOO" என்ற சமூக ஊடகம், டுவிட்டர் நிறுவனத்தின் அம்சங்களுடன் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், டுவிட்டர் நிறுவனம் இந்திய அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்கும் நபர்களின் கணக்குகளை முழுமையாக ஏன் முடக்கவில்லை என்பதை விளக்கியிருக்கிறது. அதன் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
 
குறிப்பிட்ட நாட்டில் தகவல்களை கட்டுப்படுத்த கடைப்பிடிக்கும் எங்களுடைய கொள்கையின்படி, இந்தியாவில் பதிவிடப்பட்ட அரசுக்கு எதிரானதாக கருதப்படும்  தகவல்களை அந்த நாட்டில் மட்டும் யாரும் அணுகாதவாறு நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்.
 
ஏனென்றால் அது எங்களுடைய பேச்சு மற்றும் கருத்துச்சுதந்திர கோட்பாடுகளின்படி இந்திய அரசு சட்டத்துக்கு உட்பட்டு நாங்கள் செய்ய உத்தரவிடப்படும்  நடவடிக்கைகளை இணங்க வேண்டும் என்பதை நாங்கள் நம்பவில்லை. ஊடக தளங்கள், பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் போன்றோரின்  கணக்குகள் மீது நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படிச்செய்வது இந்திய சட்டத்தின் கருத்துச் சுதந்திர அடிப்படை உரிமையை மீறுவதாக அமையும்  என நாங்கள் நம்புகிறோம் என்று டுவிட்டர் கூறியுள்ளது.
 
விவசாயிகளின் போராட்டம் தொடர்பான தவறான தகவல்களை பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தானி பயன்பாட்டாளர்கள் பரப்புவதாக இந்திய அரசு டுவிட்டருக்கு  உத்தரவிட்ட ஆணையில் கூறியிருந்தது. அதில், டுவிட்டர் நிறுவனத்தின் குறிப்பிட்ட சில பக்கங்கள், இந்தியாவின் சில பகுதிகளில் போராட்டங்களை தூண்டும் வகையில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
 
முன்னதாக, இந்திய அரசு டுவிட்டர் நிறுவனத்துக்கு பிறப்பித்த தனித்தனி ஆணைகள் தகவல் தொழில்நுட்பத்தின் 69ஏ சட்டப்பிரிவின்படி நோட்டீஸ் மூலம்  வழங்கப்பட்டது. அந்த ஆணைப்படி தற்காலிகமாக டுவிட்டர் நிறுவனம் சில கணக்குகளை முடக்கியபோதும், அதில் சில பக்கங்கள் மீதான கட்டுப்பாடுகளை டுவிட்டர் நிறுவனம் சில மணி நேரத்தில் நீக்கியது. இதைத்தொடர்ந்தே டுவிட்டர் நிறுவனம் மீதான தனது அதிருப்தியை இந்திய அரசு "கூ" என்ற செயலி வாயிலாக  வெளிப்படுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.
 
இது தொடர்பான தகவலை தங்களுடைய டுவிட்டர் பக்கத்திலேயே பகிர்ந்துள்ள பல அமைச்சர்கள், தங்களை பின்தொடர "KOO" செயலியில் இணையுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
 
பாலிவுட் பிரபல நட்சத்திரம் கங்கனா ரனாவத்தும் டுவிட்டரில் இருந்து கூ செயலிக்கு மாற வேண்டிய நேரம் வந்து விட்டது என்று ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்