இலங்கை அரசாங்கத்தின் தவறான விவசாய கொள்கையினால் முழு விவசாயத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலைமை ஏற்படும் என, தேசிய விவசாய ஒருங்கிணைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான விவசாய கொள்கையினால் தற்போது முழு விவசாயத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு மட்டும் 33 லட்சம் மெட்ரிக் அரிசி இறக்குமதி செய்யப்படும். டாலர் நெருக்கடி காரணமாக உணவு பொருட்களின் இறக்குமதியும் எதிர்வரும் காலங்களில் மட்டுப்படுத்தப்படலாம்.
எதிர்வரும் காலங்களில் பெரும் உணவு தட்டுப்பாடு ஏற்பட போகிறது. அதனை எதிர்கொள்ள வேண்டும் என அரசாங்கம் வெறும் பேச்சளவில் மட்டும் குறிப்பிட்டுக் கொள்கிறதே தவிர செயல் ரீதியில் முன்னேற்றகரமான வகையில் எவ்வித தீர்மானங்களையும் செயற்படுத்தவில்லை. உணவு தட்டுப்பாடு தீவிரமடைந்தால் எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத காலப்பகுதியில் மக்கள் உனவின்றி பட்டினியால் உயிரிழக்கும் அவலநிலை ஏற்படும்.
ஆகவே, பொதுமக்கள் வெற்று நிலங்களில் தங்களால் முடிந்தவரை வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது அத்தியாவசியமானது. தமக்கான உணவு பொருட்களை தாமே உற்பத்தி செய்துகொண்டால் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை இயன்ற வரையில் எதிர்கொள்ளலாம்" என தெரிவித்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 2023 வரை இலங்கைக்கு போதுமான மருத்துவப் பொருட்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என, இலங்கைக்கான உலக சுகாதார மையத்தின் பிரதிநிதி கலாநிதி. அலகா சிங்கை, வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அலகா சிங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, தற்போதைய சுகாதாரம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கான உலக சுகாதார மையத்தின் முழுமையான ஆதரவை கலாநிதி. சிங்கை உறுதிப்படுத்தியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார மையத்திடமிருந்து, குறிப்பாக இலங்கையிலுள்ள நாட்டுக்கான அலுவலகம் மற்றும் தற்போதைய சுகாதாரம் சம்பந்தப்பட்ட சவால்களின் நிலையைக் கையாள்வதில் அரசாங்கத்துக்கு உதவுவதற்கு பல வெளிநாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ள வலுவான, நிலையான மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்காக இலங்கை அரசாங்கத்தின் உண்மையான பாராட்டுக்களை அமைச்சர் பீரிஸ் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.