கோவையில் சிவன் கோவில் இடிக்கப்பட்டதா? வைரல் செய்தியின் உண்மை நிலை என்ன?

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (21:51 IST)
கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி காலை மாநகராட்சி அதிகாரிகள் சுயம்பு தம்பிரான் சாமி கோவிலை இடிக்க வந்ததாக செய்தி பரவியதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஊர் பொதுமக்கள், பாரதிய ஜனதா கட்சியினர், இந்து முன்னணியினர் அங்கு அதிக அளவில் கூடினர்.
 
கோவையில் சிவன் கோவில் இடிக்கப்பட்டதா? வைரல் செய்தியின் உண்மை நிலை என்ன?
 
இந்து தேசத்தை உருவாக்குவதில் பின்னணியில் செயல்படும் இந்து அமைப்புக்களின் பங்கு
 
ஆனால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேல் முறையீடு செய்யப்போவதாக கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டதால் சிறிது கால அவகாசம் வழங்கி மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
 
சுயம்பு தம்பிரான் சுவாமி திருக்கோவிலுக்கு அருகில் தான் ஸ்ரீதரனின் ஐஷ்வர்யா ரெசிடென்சி என்கிற அடுக்குமாடி குடியிருப்பு இருந்து வருகிறது. இவர் கோல்டுவின்ஸ் - வீரியம்பாளையம் சாலையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்.
 
இந்த நிலையில் ஆகஸ்ட் 4-ம் தேதி மாநகராட்சி அதிகாரிகள் கலைந்து சென்ற பிறகு அங்கு மேற்கொள்ளப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு இடிப்பு நடவடிக்கைகளை புகைப்படம் எடுப்பதற்காக சென்றிருந்தேன். அப்போது ஓய்வு பெற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனிசாமி மேலும் பலருடன் இணைந்து கொண்டு என்னை தாக்கினார் என ஸ்ரீதரன் புகார் அளித்துள்ளார். அது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் ஆதாரமாக வெளியிட்டுள்ளார்.
 
கூட்டம்
 
இது தொடர்பாக ஸ்ரீதரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் பழனிசாமி கோவில் குழுவின் முக்கியமான பொறுப்பில் உள்ளார். சம்பவம் நடந்த அன்று நீதிமன்றத்தில் ஆதாரம் சமர்பிப்பதற்காக கோவிலை புகைப்படம் எடுக்கச் சென்றிருந்தேன். அப்போது பழனிசாமி, மனோகர் மற்றும் மேலும் சிலர் உடன் என்னை துரத்தி வீட்டிற்குள் வரை வந்து கடுமையாக தாக்கினர். என்னுடைய செல்போனையும் பறித்து சென்றுவிட்டனர்." என்றார்.
 
"நீ உயிரோடவே இருக்க மாட்டாய், நீ குடும்பத்தோடு இந்த ஊரில் வசிக்க முடியாது, காவல்துறையின் எனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி உன் மீது பொய் வழக்கு போட்டு உன்னை நாசம் செய்துவிடுவேன்" என்று மிரட்டியதாகவும் அவர் கூறினார்.
 
"என்னை துரத்தி வந்து தாக்கியதும் என் செல்போனை பறித்து சென்றதும் என் கட்டிடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. முழுமையான ஆதாரங்களுடன் தான் காவல்துறை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளேன். " என்று அவர் மேலும் கூறினார்.
 
மனுதாரர்
படக்குறிப்பு,
ஸ்ரீதர்
 
"ஆக்கிரமிப்பாளர்கள் தங்களுடைய ஆக்கிரமிப்பு சொத்துகளை காப்பாற்றும் நோக்கில் தவறான பொய் செய்திகளை பரப்பி மதத்தின் பெயரால் பொதுமக்கள், பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினரை தூண்டிவிட்டு போராட்டங்களில் ஈடுபட வைத்தனர். முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவரே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தவிடாமல் நீதிமன்ற உத்தரவை மீறும் விதமாக செயல்பட்டதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
 
இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஓய்வு பெற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனிசாமி பிபிசி தமிழிடம் பேசியபோது, "நான் தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. கோவிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்த ஸ்ரீதரன் என்பவர் அன்று வீடியோ எடுக்க கோவிலுக்குள் நுழைந்தார். அன்று ஏற்கெனவே கோவில் அகற்றும் நடவடிக்கையால் பதற்றமாக இருந்தது. அதனால் இந்த நிலையில் கோவிலுக்குள் நீங்கள் வர வேண்டாம் எனக் கூறினோம். ஆனால் அவர் மது போதையில் இருந்து கொண்டு உள்ளே வர முயன்றார். நாங்கள் கூறியதை கேட்கவில்லை. அதனால் தான் அவரை வீட்டிற்குள் செல்லுமாறு அனுப்பி வைத்தோம். மற்றபடி புகாரில் கூறியுள்ளதைப் போல அவரை தாக்கவோ செல்போனை பறிக்கவோ இல்லை" என்றார்.
 
ஆகஸ்ட் 4 அன்று என்ன நடந்தது?
 
கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி அதிகாலை மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையினரின் உதவியுடன் கோவிலை இடிக்கப்போவதாக செய்திகள் பரவத் தொடங்கின. மாநகராட்சி அதிகாரிகள் கோவில் சுற்றுச் சுவரின் ஒரு பகுதியை மட்டும் ஜே.சி.பி இயந்திரம் மூலம் தகர்த்திருந்தனர்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் திரண்டனர். அப்போது நிலவிய பதற்றத்தை தணிக்க காவல்துறையினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
 
உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் கோவில் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் சிறிது கால அவகாசம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டதாலும் அகற்றும் நடவடிக்கை மாநகராட்சியால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
 
கோவில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி அகற்றப்பட்டுள்ள நிலையில், கோவில் இடிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தவறாக செய்தி பரவியது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்