நேற்று துருக்கியில் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ரஷ்யா, யுக்ரேனின் முக்கிய நகரங்களில் தனது ராணுவ நடவடிக்கையை குறைப்பதாக தெரிவித்த நிலையில் யுக்ரேன் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளது.
கீயவ் மற்றும் செரீனிஹிவ் ஆகிய யுக்ரேன் நகரங்களுக்கு வெளியே ரஷ்யப் படைகளின் ராணுவ நடவடிக்கையை "முற்றிலும் குறைப்போம்" என, ரஷ்யாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸாண்டர் ஃபோமின் தெரிவித்திருந்தார்.
அமைதி பேச்சுவார்த்தையில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கே இந்த முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுக்ரேனில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய நாள் முதல் ஏற்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் ரஷ்யாவின் இந்த அறிவிப்பு.
ஆனால் ரஷ்யா எந்த அளவிற்கு தனது ராணுவ நடவடிக்கையை குறைக்கும் என குறிப்பிடவில்லை. அதேபோல யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கி, ரஷ்யாவின் வார்த்தைகளை நம்புவதற்கான காரணங்கள் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல களத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் பேச்சைக் காட்டிலும் செயலைதான் நம்ப வேண்டும் என பிரிட்டனும் தெரிவித்துள்ளது.
என்ன சொல்கிறார் செலன்ஸ்கி?
துருக்கியில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு கீயவ் மற்றும் செர்னிஹீவ் நகரை சுற்றிய ராணுவ நடவடிக்கையை குறைப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கி, "யுக்ரேனியர்கள் முட்டாள்கள் அல்ல," என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யா ராணுவ நடவடிக்கையை மிகப்பெரிய அளவில் குறைப்பதாக தெரிவித்தாலும் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் அதில் பெரிதும் நம்பிக்கை காட்டவில்லை.இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "ரஷ்யாவின் செயல்களை கொண்டுதான் முடிவுக்கு வர முடியும்" என தெரிவித்திருந்தார்.
அதேபோல பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளன.
யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நாளை (வியாழக்கிழமை) ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் காணொளி காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளதாக, ஆஸ்திரேலிய வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ஸ்டூவர்ட் ராபர்ட் தெரிவித்துள்ளார்.
"போருக்கான எந்தவித காரணமும் இல்லாமல் யுக்ரேன் மீது படையெடுப்பை தொடங்கிய ரஷ்யாவுக்கு எதிராக அசாத்திய தைரியத்தையும் உறுதியையும் யுக்ரேன் வெளிப்படுத்துகிறது," என அவர் தெரிவித்துள்ளார்.
யுக்ரேனுக்கு 65 மில்லியன் டாலர் மதிப்பிலான மனிதநேய உதவிகளை ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது. மேலும், 91 மில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு சாதனங்களை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ள ஆஸ்திரேலியா, "யுக்ரேனுக்கான ராணுவ உதவி, உடனடி தேவையாகவும் தொடர்ந்து நீடிக்கக்கூடியதாகவும் உள்ளது," என தெரிவித்துள்ளது.
ஐ.நா., மற்றும் அமெரிக்க நாடாளுமன்றம் முதல் ஜப்பான் நாடாளுமன்றம் வரையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் தலைவர்களின் கூட்டங்களில் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.
பல்வேறு நாடுகளின் நாடாளுமன்றங்களில் அவருடைய பேச்சுக்கு அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவிக்கின்றனர். அவருடைய பேச்சு, மேற்கு நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் யுக்ரேனுக்கான ஆதரவை திரட்டும் "தகவல் போர்" என விவரிக்கப்படுகிறது.
"யுக்ரேனின் ஆத்மாவை பிரதிபலிப்பது எப்படி என அவருக்கு தெரிந்திருக்கிறது. அவருடைய பேச்சு மட்டுமல்ல, அவர் எப்படி தோன்றுகிறார், அவருடைய பின்னணி தோற்றம், எங்கு பேசுகிறார் என்பதிலும் அவை பிரதிபலிக்கிறது," என, நிபுணர் ஒருவர் பிபிசியிடம் சமீபத்தில் தெரிவித்தார்.
தொடரும் ஷெல் தாக்குதல்கள்
பேச்சுவார்த்தைக்கு பிறகு ராணுவ நடவடிக்கையை குறைப்பதாக ரஷ்யா தெரிவித்திருந்தாலும், ரஷ்ய நகரில் குண்டுவெடிப்புகள் தொடர்வதை காணமுடிகிறது.
தெற்கு யுக்ரேனில் உள்ள மிகோலைவ் நகரில் நிர்வாக கட்டடத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது செவ்வாயன்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் மூலம் தெரியவந்தது.
இந்த தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கியில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு வெற்றி பெறும் என தெரியவில்லை என நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் மோதலுக்கான காரணம் குறித்து விவாதிக்கப்படவில்லை என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.