பாலுறவு கட்டுக்கதைகள்: திட்டமிட்டது அல்லது எதேச்சையானது - எது சிறந்தது? - அறிவியல் உண்மைகள்

Webdunia
வியாழன், 4 மே 2023 (12:30 IST)
தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்களில் பாலுறவு பற்றிய சித்தரிப்புகள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட்ட, முன்னறிவிப்பு அல்லது திட்டமிடல் இல்லாததாக தோன்றும்.
 
ஊடகங்களில் வரும் இந்தக் காட்சிகள், எவ்வித திட்டமிடலும் இல்லாமல் தன்னிச்சையான தோன்றும் சமயத்தில் மேற்கொள்ளப்படும் உடலுறவே உணர்ச்சிகரமானது, நிறைவானது என்ற கருத்தை நிறுவ முயல்கின்றன.
 
உண்மையில், எங்கள் ஆய்வுகளில், அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள தம்பதிகளிடம் அவர்களின் பாலியல் விருப்பங்களைப் பற்றி நாங்கள் கேட்டபோது, ​​முன்கூட்டியே திட்டமிடப்பட்டதை விட, திட்டமிடப்படாத செக்ஸ் மிகவும் திருப்திகரமாக இருக்கும் என்று பெரும்பான்மையானவர்கள் நம்பினர்.
 
திட்டமிடப்படாத உடலுறவு குறித்த கட்டுக்கதைகள்
ஆனால், திட்டமிடப்படாத உடலுறவு உண்மையில் அதிகம் நிறைவை தருகிறதா?
 
சிலருக்கு தன்னிச்சை உடலுறவு என்பது உணர்ச்சியின் அடையாளமாக இருந்தாலும், அதை மதிப்பிடுவதில் சில குறைபாடுகள் உள்ளன.
 
ஒரு புதிய உறவில் பாலியல் ஆசை தீவிரமானதாக இருக்கலாம், திட்டமிடாமலேயே உடலுறவு நிகழ்வதாக தோன்றலாம். ஆனால், காலப்போக்கில் இந்த ஆசை குறைந்துபோகிறது.
 
ஆசை தன்னிச்சையாக ஏற்படுவதற்காக காத்திருக்கும் நீண்ட கால தம்பதிகளின் உடலுறவு என்பது சிறிய அளவோடு முடிந்துபோகலாம்.
உடலுறவுக்கு திட்டமிடுவது என்பது கவர்ச்சி குறைவானதாக கருதப்பட்டாலும், இத்திட்டமிடல் அவசியமானது.
 
எப்போது உடலுறவு கொள்வது என்பதற்கு திட்டமிடுவது அவர்களை அதற்கு தயாராகிக்கொள்வதற்கு உதவும் . இது உடலுறவை சிறப்பானதாக மாற்றும்.
 
ஆய்வு கூறுவது என்ன?
திட்டமிடாத உடலுறவு என்பது அமெரிக்க கலாசாரம், மனநிலை மற்றும் ஊடகங்களில் ஊடுருவுகிறது என்பது உண்மைதான் என்றபோதிலும், திட்டமிட்ட உடலுறவு , திட்டமிடாத உடலுறவுடன் எவ்வாறு ஒப்பிடுகிறது என்பது தொடர்பாக சிறிய ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
 
கனடாவில் உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தின் பாலியல் ஆரோக்கியம் மற்றும் உறவுகள் ஆய்வகத்தில் உள்ள எங்கள் ஆராய்ச்சிக் குழு, அமெரிக்காவில் இருந்து 303 தனிநபர்களையும் கனடாவில் இருந்து 102 ஜோடிகளையும் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தியது.
 
"துணையுடன் திட்டமிடாமல் உடலுறவில் ஈடுபடுவது அதிக தன்னிறைவை தருகிறது` அல்லது "உடலுறவில் ஈடுபடப்போவது குறித்து முன்னரே தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்ற வாக்கியங்களை எந்தளவு அவர்கள் ஏற்றுகொள்கின்றனர் என்பது குறித்து அவர்களிடம் கேட்கப்பட்டது. மேலும், அவர்களின் சமீபத்திய உடலுறவு திட்டமிடப்பட்டதா அல்லது திட்டமிடப்படாததா என்றும், அவர்களின் சமீபத்திய உடலுறவு அல்லது நீண்ட கால உடலுறவு இதில் எது நிறைவாக தோன்றியது என்றும் அவர்களிடம் கேட்கப்பட்டன.
 
மூன்று வாரங்களாக அவர்களின் தினசரி அனுபவங்களையும் குறித்து வைத்துக்கொண்டோம்.
 
எது நிறைவை தருகிறது?
இரண்டு ஆய்வுகளிலும், திட்டமிடப்படாத உடலுறவு சிறந்தது என்று மக்கள் நம்பினர். ஆனால் இந்த நம்பிக்கைகளுக்கு மாறாக, திட்டமிடப்படாத உடலுறவு திருப்திகரமாக இல்லை.
எங்கள் முதல் ஆய்வில், திட்டமிடப்படாத உடலுறவு நிறைவானதாக இருந்ததாக பலரும் உறுதியாக கூறினாலும், அவர்களின் மிக சமீபத்திய பாலியல் அனுபவம் தன்னிச்சையாக நிகழ்ந்ததாகக் கண்டறியப்பட்டபோது, அவர்களின் திட்டமிட்ட உடலுறவை விட இது திருப்திகரமானதாகக் காணவில்லை.
 
உடலுறவை திட்டமிடுவது சிறந்ததல்ல என்று நம்புபவர்களுக்கு, சில நேரங்களில் திட்டமிடப்பட்ட உடலுறவு என்பது கவர்ச்சி குறைவானதாக தோன்றலாம்.
 
இரண்டாவது ஆய்வில், தம்பதிகளின் பாலியல் அனுபவங்களை 21 நாட்களுக்கு நாங்கள் ஆய்வு செய்தோம். அதில், திட்டமிடப்பட்ட உடலுறவோ, திட்டமிடப்படாத பாலுறவோ திருப்தி அளிப்பதில் பெரிய வேறுபாட்டை கொண்டிருக்கவில்லை .
 
திட்டமிடாத உடலுறவு, திட்டமிட்ட உடலுறவு அவர்களின் பாலியல் இன்பத்திற்கு எவ்வாறு பங்களித்தது என்பதை மக்கள் எப்படி உணர்ந்தார்கள் என்பதை அறியவும் நாங்கள் விரும்பினோம். சுவாரஸ்யமாக, பாலியல் தூண்டுதல், ஆர்வம், ஆசை ஆகியவை திட்டமிடாத உடலுறவில் இருந்ததாக தெரிவித்தனர்.
 
அதே நேரத்தில், திட்டமிட்ட உடலுறவு எதிர்பார்ப்பு, பாலியல் ஆசையை வளர்க்கும் என்றும் பலர் குறிப்பிட்டிருந்தனர். திட்டமிட்ட உடலுறவில் அழுத்தம் இருப்பதாகவும் சிலர் குறிப்பிட்டனர்.
 
எதையுமே திட்டமிடுவது அவசியம்
திட்டமிடாத உடலுறவுக்கு மக்கள் மதிப்பளிப்பதற்கான காரணங்களில் ஒன்று அவர்கள் அதை தங்களின் ஆரம்ப கால உறவுடனான விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் இணைத்து பார்க்கின்றனர்.
 
மறுபுறம், திட்டமிடப்பட்ட உடலுறவு என்பது பொறுப்பு, கடமை ஆகியவற்றுடன் தொடர்புடைய காமத்துக்கு எதிரான தொடர்புகளைத் தூண்டலாம். இவை நிச்சயமாக ஒரு நல்ல ரொமான்ஸுக்கு உதவுபவை அல்ல.
 
அதேநேரத்தில், திட்டமிட்ட உடலுறவின் மதிப்பைப் புரிந்துகொள்வது, தம்பதிகள் தங்கள் பாலியல் திருப்தியைப் பராமரிக்க உதவும் என்று எங்கள் ஆராய்ச்சி காட்டுகிறது. குறிப்பாக, வேலை பளு, குழந்தை பிறப்பு போன்ற கடினமான நேரங்களில் திட்டமிடப்படாத உடலுறவு என்பது சவாலானதாக இருக்கும் என்பதை தம்பதிகள் நினைவில் கோள்வது மிகவும் முக்கியம்.
 
பாலியல் தொடர்புடன் போராடும் தம்பதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வல்லுநர்கள், திட்டமிடப்படாத உடலுறவு பற்றிய கருத்துகள் பற்றிய ஐடியாக்களுக்கு எதிராக நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றனர்.
 
எதையும் முன்பாகவே திட்டமிடுவது என்பது வாழ்க்கையில் நமக்கு மிகவும் அவசியம். எடுத்துக்காட்டாக உங்களின் கடைசி சுற்றுலாவையே எடுத்துக்கொள்ளுங்கள். அது நிச்சயம் திட்டமிடப்பட்டதாகவே இருக்கும், அதேபோல் மகிழ்ச்சியானதாகவும்.
 
நீங்களும், உங்களின் துணையும் செக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்றால், நிச்சயம் திட்டமிடலுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உடலுறவை திட்டமிடுவது என்பது அதற்காக அட்டவணை போடவேண்டிய ஒன்று என்று அர்த்தமல்ல.
 
நீங்கள் எப்போது ஆசையுடன் இருப்பீர்கள் என்பதை உங்கள் துணைக்கு புரியவைப்பதே ஆகும். சில நேரங்களில், மாலை வேளைக்கு பதிலாக காலையிலோ அல்லது பகலில் உடலுறவில் ஈடுபடுவது உங்களுக்கும் உங்களின் துணைக்கும் விருப்பமானதாக இருக்கலாம்.
 
பெரும்பாலான தம்பதிகளுக்கு செக்ஸ் என்பது அவர்கள் இடையேயான பிணைப்பை வலுபடுத்தவும், தொடரவும் உதவும் வழியாகும். ஒரு நல்ல செய்தி என்னவென்றால், திட்டமிடாத உடலுறவைப் போலவே திட்டமிட்ட உடலுறவும் நிறைவைத் தரும்.
 
காத்ரினா கோவாசெவிக், கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்தில் சமூக மற்றும் ஆளுமை உளவியலில் PhD மாணவியாக உள்ளார். எமி மியூஸ் கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியராக உள்ளார்.
 
இந்த கட்டுரைtதி கார்வெர்சேசனில் வெளியிடப்பட்டது மற்றும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் இங்கே மீண்டும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்