புத்தம் புது காலை - திரை விமர்சனம்

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (08:50 IST)
நடிகர்கள்: ஜெயராம், ஊர்வசி, காளிதாஸ் ஜெயராம், கல்யாணி ப்ரியதர்ஷன், எம்.எஸ். பாஸ்கர், ரீது வர்மா, சுஹாசினி, அனுஹாசன், ஸ்ருதிஹாசன், ஆண்ட்ரியா, லீலா சாம்சன், சிக்கல் குருசரண், பாபி சிம்ஹா, முத்துக்குமார்; இசை: ஜீ.வி. பிரகாஷ், சதீஷ் ரகுநாதன், நிவாஸ் கே. பிரசன்னா, இயக்கம்: சுதா கோங்கரா, கௌதம் வாசுதேவ் மேனன், சுஹாசினி, ராஜீவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ்.

அமெஸான் பிரைமில் வெளியாகியிருக்கும் "புத்தம் புது காலை", ஐந்து குறும்படங்களின் தொகுப்பு. கொரோனா ஊரடங்கின் பின்னணியில் பாஸிட்டிவான உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட படங்கள் இவை.

முதல் படம் சுதா கோங்கரா இயக்கியிருக்கும் 'இளமை இதோ, இதோ'. மனைவியை இழந்த ஒரு ஆணுக்கும் கணவனை இழந்த பெண்ணும் இடையிலான காதலே இந்தப் படத்தின் கதை. இருவருக்கும் வளர்ந்த குழந்தைகள் இருந்தாலும், இளம் காதலர்களைப் போல நடந்துகொள்கிறார்கள். அதைக் காட்ட ஒரு இளம் ஜோடியைப் பயன்படுத்தியிருப்பதும் சிறப்பாக இருக்கிறது.

அடுத்த படம், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் 'அவரும் நானும் - அவளும் நானும்'. காதல் திருமணம் செய்துகொண்ட தன் பெற்றோரை, ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கிய தாத்தாவுக்கும் அவரது பேத்திக்கும் இடையிலான உறவுதான் கதை. ஒரு கட்டத்தில், தன் பெற்றோரை ஏன் ஏற்கவில்லையென கேட்கிறாள் பேத்தி. அதற்கு தாத்தா சொல்லும் பதில்தான் படத்தின் முடிச்சு.

மூன்றாவது படம் சுஹாசினி மணிரத்னம் இயக்கியுள்ள 'காஃபி எனி ஓன்?' வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில், கோமாவில் உள்ள ஒரு நோயாளியை தன் அரவணைப்பினாலும் கவனிப்பினாலும் கதாநாயகன் மேம்படுத்துவாரே.. கிட்டத்தட்ட அந்தக் கதைதான். மூச்சுப் பேச்சின்றி கிடக்கும் தன் மனைவியை, மகள்களின் எதிர்ப்பை மீறி வீட்டுக்கு அழைத்துவந்து விடுகிறார் கணவர். அவரது அன்பால் மனைவி மீள்கிறாரா என்பதுதான் கதை.

நான்காவது படம் ராஜீவ் மேனன் இயக்கியுள்ள 'Reunion'. கொரோனா காலத்தில் தன் பள்ளித் தோழனின் வீட்டில் வந்து தங்கும் தோழிக்கு போதைப் பழக்கம் இருக்கிறது. தோழனின் நல்லெண்ணம் அவளை மீட்கிறதா என்பதுதான் கதை.

ஐந்தாவது படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள 'Miracle'. கொரோனாவால் பணம் இல்லாமல் ஒரு இயக்குனரின் படம் நின்றுவிடுகிறது. மற்றொரு பக்கம், ஒரு காரில் பெரும் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறார்கள் இரண்டு பேர். இந்த இரண்டு தரப்பில் யார் வாழ்வில் அற்புதம் நடக்கிறது என்பதுதான் கதை.

மொத்தமுள்ள 5 படங்களில் முதல் நான்கு படங்கள், மேல்தட்டு வர்க்கத்தினரின் பார்வையிலிருந்து வாழ்க்கையை அணுகி, நல்லுணர்வை ஏற்படுத்த முயல்கின்றன. அதனாலேயே சில காட்சிகள், சாதாரண தொலைக்காட்சி தொடர்களுக்கு உரிய தன்மைகளுடன் இருக்கின்றன.

ஆனால், இளமை இதோ, இதோ படத்திலும் அவரும் நானும் - அவளும் நானும் படத்திலும் கதை - திரைக் கதையின் வலுவால், படங்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் மிராக்கிள் திரைப்படம், எதிர்பார்க்கக்கூடிய திருப்பத்துடன் இருப்பதால் சற்று ஏமாற்றமளிக்கிறது. ஆனால், சுவாரஸ்யமாக இருக்கிறது.

இந்தத் தொகுப்பிலேயே மிக பலவீனமான படம், Reunionதான். கதையில் ஆரம்பித்து எல்லாமே மேலோட்டமாக இருப்பதால், ஒன்றவே முடியாத படம் இது.

இந்த ஐந்து படங்களிலும் ஆங்காங்கே பாடல்கள் இருந்தாலும், காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும் பாடல், 'அவரும் நானும்' படத்தில் வரும் "கண்ணா தூது போடா.. உண்மை சொல்லி வாடா.." பாடல்தான்.

பாஸிட்டிவான படம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த "புத்தம் புது காலை" ஒரு புத்துணர்ச்சியை அளிக்கலாம். தேர்ந்த திரைப்பட ரசிகர்களுக்கு இதிலுள்ள சில படங்கள் பெரும் ஏமாற்றத்தை அளிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்