பாருல் பார்மர்: உலக பாரா-பேட்மிண்டன் போட்டிகளின் ராணி

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (14:58 IST)
மற்ற தொழில்களை போல விளையாட்டுத் தொழிலை நீண்ட காலம் செய்வது கடினம். 40 வயது வரை விளையாட்டில் நீடிக்கும் வீரர்கள் வெகு சிலரே.

அந்த வகையில், பாருல் தல்சுக்பாய் பார்மரை சூப்பர்வுமன் என்றுதான் சொல்ல வேண்டும். 47 வயதிலும் பாரா பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் SL3 பிரிவில் உலக அளவில் முதலிடத்தில் இருக்கிறார். உலகத்தர வரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சக போட்டியாளரான மானசி ஜோஷியோடு 1000 புள்ளிகள் முன்னிலையில் இருக்கிறார் பார்மர்.

தற்போது உலகப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பார்மரின் புள்ளிகள் 3,210. ஜோஷி 2,370 புள்ளிகளோடு இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

பார்மரின் சிறப்பான ஆட்டம், 2009ஆம் ஆண்டு அவருக்கு விளையாட்டின் மிக உயரிய விருதான அர்ஜுனா விருதை அவருக்கு பெற்றுக் கொடுத்தது. அப்போதில் இருந்து அவரது துறையில் அவர் முன்னேற்றத்தையை கண்டு வருகிறார்.

தடைகளை வாய்ப்புகளாக மாற்றிய பார்மர்

குஜராத் மாநிலம் காந்திநகரை சேர்ந்த பார்மர், சிறு வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். தனது மூன்று வயதில் ஒரு முறை ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்தது அவரது வாழ்வை மேலும் மோசமாக்கியது. அவருடைய தோல்பட்டை எலும்பு மோசமாக பாதிக்கப்பட்டு, வலது கால் உடைந்து போனது.

அதில் இருந்து குணமடைய அவருக்கு நீண்டகாலம் ஆனது. பார்மரின் தந்தை ஒரு பேட்மிண்டன் வீரர். உள்ளூரில் உள்ள ஜிம்கானா கிளப்பில் விளையாடுவார்.

பார்மர் ஒரே இடத்தில் அமராமல், சற்று நடமாட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து, அவர் அவரது தந்தை விளையாடுவதை காண அவருடன் கிளப்பிற்கு செல்வார்.

பின்னர் தனது வீட்டருகே வசிக்கும் குழந்தைகளுடன் விளையாடத் தொடங்கினார். ஆரம்பத்தில் மற்றவர்கள் விளையாடுவதை அமர்ந்து பார்க்க மட்டுமே செய்வார். பிறகு மெதுவாக பார்மரும் விளையாடத் தொடங்கினார்.

அப்படிதான் பேட்மிண்டன் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அவரது பேட்மிண்டன் திறன்களை பார்த்த உள்ளூர் பயிற்சியாளர் சுரேந்திர பாரிக், பார்மரை தொடர்ந்து விளையாடவும் பயிற்சி எடுக்கவும் ஊக்கமளித்தார்.

குடும்பத்தின் ஆதரவு

தான் வெற்றிப் பாதைக்கு செல்ல, தனது பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் நிறைய தியாகம் செய்ததாக பார்மர் கூறுகிறார்.

தன் உடன் பிறந்தவர்கள் தங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொள்வதைவிட, தனது உடைந்துபோன இறகுபந்துக்கு பதிலாக புதிய ஒன்றை வாங்கிக் கொள்ளுமாறு மகிழ்ச்சியுடன் கூறுவார்கள் என்கிறார்.

பார்மர் பேட்மிண்டன் விளையாட என்னவெல்லாம் வேண்டுமோ அவை அனைத்தையும் செய்ய வேண்டும் என்பது அவரது குடும்பத்தாரின் குறிக்கோளாக இருந்தது.

தன் விளையாட்டு வாழ்க்கை முழுக்க தான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதையோ, அல்லது தனக்கு ஏதோ ஒரு குறை உள்ளது என்றோ யாரும் தன்னை உணர வைத்ததில்லை என்கிறார் பார்மர்.

ஒரு முறை பார்மரை அவரது ஆசிரியர், நீ என்னவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டதற்கு அவரிடம் அதற்கு பதில் இல்லை. அந்த கேள்வியை பார்மர் தனது தந்தையிடம் போய் கேட்க, ஒரு நிமிடம் கூட தயங்காமல், "நீ ஒரு சிறந்த பேட்மிண்டன் வீராங்கனையாக ஆவாய்" என்று அவர் கூறியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் தான் அல்லது தனது தந்தை எதிர்பார்த்ததை விடவே அதிகம் சாதித்தார் பார்மர்.

ஆரம்பத்தில் பாரா-பேட்மிண்டன் விளையாட்டை தொழில்முறையாக எடுத்துக் கொள்ளலாம் என்று பார்பருக்கு தெரியவில்லை. எனினும், தனக்கு கிடைத்த வலிமையான ஆதரவுக்கு அவர் நன்றி கூறுகிறார்.

அவரது குடும்பத்தார் மட்டும் அல்ல, அவரது சக வீரர்கள் கூட பார்மருக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்து, பல போட்டிகளில் கலந்து கொள்ள அவர் பயணிக்க உதவி செய்தனர்.

எனினும், மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் தன் போன்ற பலருக்கு சமூகம் மற்றும் குடும்பத்தாரிடம் இருந்து இது போன்ற ஆதரவு கிடைப்பதில்லை என்று அவர் கூறுகிறார்.

பெரும் சாதனைகள்

2007ஆம் ஆண்டு பாரா பேட்மிண்டன் ஒற்றையர் மற்றும் இரட்டையர் இரு பிரிவிலும் வென்று பட்டம் பெற்றார். 2015 மற்றும் 2017ல் தொடர்ந்து உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றார்.

2014 மற்றும் 2018ல் ஆசிய பாரா போட்டிகளில் தங்கப்பதங்களை வென்றார் பார்மர். இத்தனை ஆண்டுகளாக அந்தப்பிரிவில் தேசிய சாம்பியனாக தொடர்ந்து இருக்கிறார்.

வரவிருக்கும் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கும் பார்மர், 2009ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா தேவி சிங் பாட்டிலிடம் இருந்து அர்ஜுனா விருது வாங்கியது தான் தன் விளையாட்டு வாழ்வின் மிகப்பெரிய தருணம் என்று கூறுகிறார்.

இந்த நிலைக்கு முன்னேறுவேன் என்று ஆரம்ப கட்டத்தில் நினைத்தே பார்த்ததில்லை என்று பார்மர் கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்