பூஜா கெஹ்லோத்: மல்யுத்த களத்துக்கு வந்த வாலிபால் வீராங்கனையின் கதை
வியாழன், 28 ஜனவரி 2021 (14:43 IST)
பூஜா கெஹ்லோத்துக்கு அவரது குழந்தைப் பருவம் முதலே விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது.
அவருடைய உறவினரும் மல்யுத்த வீரருமான தர்மவீர் சிங்குடன் அவர் களத்துக்கு செல்லத் தொடங்கிய பொழுது அவருக்கு வயது ஆறு மட்டுமே.
மல்யுத்த வீராங்கனையாக அவருக்கு மனதில் அதிகமான விருப்பம் உண்டானது. ஆனால் பூஜா மல்யுத்த வீராங்கனை ஆவதை அவரது தந்தை விஜயேந்திர சிங் அப்போது ஆதரிக்கவில்லை.
இதற்கு பதிலாக வேறு விளையாட்டில் அவரை ஈடுபடச் சொன்னார் பூஜாவின் தந்தை.
அவருடைய அடுத்த தெரிவாக கைப்பந்து (வாலிபால்) இருந்தது. தேசிய ஜூனியர் வாலிபால் அணியில் கூட அவர் விளையாடினார்.
ஆனால் ஹரியானாவைச் சேர்ந்த கீதா போகத் மற்றும் பபிதா குமாரி போகத் ஆகியோர் 2010ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றதைப் பார்த்தபின்பு பூஜாவின் வாழ்க்கை மாறியது.
போகத் சகோதரிகளின் அடியொற்றி தாமும் நடக்க வேண்டியிருக்கும் என்று பூஜாவுக்கு அப்போது தெரிந்திருந்தது. ஆனால் அவரது தந்தை இதை விரும்பவில்லை.
நான் உன்னைத் தடுக்கமாட்டேன்; அதேசமயம் உதவி செய்யவும் மாட்டேன்; உன்னுடைய விருப்பத்தை தொடர்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் நீயாகவே செய்துகொள்ளவேண்டும் என்று அவர் கூறிவிட்டார்.
மல்யுத்த விளையாட்டு மீதான தமது மகளின் விருப்பம் மிகவும் குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும் என்று அவர் அப்போது கருதி இருந்தார்.
பயணத்துக்காக 3 மணிக்கு எழ வேண்டும்
வடமேற்கு டெல்லியின் புறநகர் பகுதியாக இருந்த நரேலாவில் பூஜா அப்போது வசித்து வந்தார். மல்யுத்தத்தில் ஈடுபட விரும்பும் இளம்பெண்களுக்கு அதற்கான போதிய வசதி எதுவும் இல்லாத பகுதி அது.
அதன் காரணமாக அவர் பயிற்சிக்காக டெல்லிக்கு தொடர்ந்து வரவேண்டியிருந்தது.
பயிற்சி மையத்தை வந்தடைய அவர் தினமும் மூன்று மணி நேரம் பேருந்தில் பயணிக்க வேண்டியிருந்தது. அதற்காகவே அவர் தினமும் அதிகாலை 3 மணிக்கு கண்விழித்தார்.
டெல்லிக்கு வந்து பயிற்சி செய்வதால் பயணத்திலேயே தமது பெரும்பாலான நேரம் கழிகிறது என உணர்ந்த பூஜா வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் ஆண் மல்யுத்த வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்தார்.
ஆனால் இதை அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் விரும்பவில்லை.
தன் மகள் மல்யுத்த விளையாட்டின் மீது காட்டும் அதீத ஆர்வத்தை கண்டு பூரித்த பூஜாவின் தந்தை, தன் மகள் போதியளவு பயிற்சி பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் குடும்பத்துடன் ரோத்தக் குடி பெயர முடிவு செய்தார்.
பயணத்தில் மிகப் பெரிய தடை
குடும்பத்தின் ஆதரவு மற்றும் கடுமையான உழைப்பு ஆகியவற்றின் காரணமாக 2016ஆம் ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற தேசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார் பூஜா.
ஆனால் 2016 ஆம் ஆண்டு அவருக்கு ஏற்பட்ட காயம் அவரது பயணத்தில் மிகப் பெரிய தடையை ஏற்படுத்தியது. ஓராண்டு காலத்துக்கும் மேலாக அவரால் விளையாட்டில் ஈடுபட முடியவில்லை.
முறையான மருத்துவ கவனிப்பு மற்றும் அவருடைய மன உறுதி ஆகியவை மீண்டும் அவரை களத்துக்கு கொண்டு வந்தன.
2017ஆம் ஆண்டு தைவானில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் அவர் தங்கம் வென்றது சர்வதேச அளவில் அவருக்கு கிடைத்த முதல் பெரிய வெற்றியாக இருந்தது.
அதன்பின்பு 2019ஆம் ஆண்டு ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்ட்-இல் நடைபெற்ற 23 வயதுக்கும் குறைவானவர்கள் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றது அவரது பயணத்தின் இன்னொரு முக்கிய மைல் கல்லாக இருந்தது.
அவர் ஊர் திரும்பிய பொழுது தற்போது அவர் குடும்பத்துடன் வசிக்கும் சோனிபட்டில் அவருக்கு மிக உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டது.
ஒரு காலத்தில் அவரது தந்தையிடம் பேசி பூஜா மேற்கொண்டு விளையாட வேண்டாம், அதில் அவரது பயணத்தை தொடர வேண்டாம் என்று அறிவுரை கூறிய உற்றாரும் உறவினரும் தற்போது பூஜா செய்துள்ள சாதனைகளை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறார்கள்.
விளையாட்டில் ஈடுபடும் பெண்களுக்கு, அதிலும் குறிப்பாக குறைந்த வருமானம் குறைவாக உள்ள பின்புலத்திலிருந்து வரும் பெண்களுக்கு அதற்கான சூழல் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார் பூஜா.
பெரும்பாலும், வறுமையான பின்புலத்திலிருந்து வருபவர்கள்தான் விளையாட்டைத் தங்கள் முழு நேரத் தொழிலாகத் தேர்வு செய்கிறார்கள் என்று அவர் கூறுகிறார்.
செலவு மிகவும் அதிகமாக இருக்கும் ஊட்டச்சத்துகள் மற்றும் பயிற்சி வசதிகள் ஆகியவற்றை வழங்கி விளையாட்டில் ஈடுபடும் பெண்களுக்கு அரசும் பிற அமைப்புகளும் உதவ வேண்டும் என்று கூறுகிறார் பூஜா.
(பிபிசி மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிய கேள்விகளுக்கு பூஜா கெஹ்லோத் அனுப்பிய பதிலின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை.)