சசிகலாவுக்கு ஏற்பட்டது கொரோனா தொற்றா? எப்போது டிஸ்சார்ஜ்? டாக்டர் பேட்டி

வியாழன், 21 ஜனவரி 2021 (14:56 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் வி.கே.சசிகலா எப்போது விடுதலை ஆவார் என்று சிறிது காலம் முன்பு நிலவிவந்த கேள்வி இப்போது அவர் எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்பதாக மாறியுள்ளது.

ஜனவரி 27-ம் தேதி தனது தண்டனை முடிந்து அவர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு அவர் பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு செய்யப்பட்ட ஆர்.டி.பிசிஆர் மற்றும் ரேபிட் ஆன்டிஜென் ஆகிய இரண்டு பரிசோதனைகளும் கொரோனா இருப்பதாக காட்டவில்லை.

மேலும் அவருக்கு சி.டி.ஸ்கேன் செய்யப்படலாம் என்ற பேச்சு நிலவி வந்தது.

இந்நிலையில், அவருக்கு சுவாசத் தொற்று இருப்பது உண்மை ஆனால், அவருக்கு முன்பு சந்தேகிக்கப்பட்டது போல கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவர் ஒருவர் கூறியுள்ளனர்.

அவர் விடுதலை ஆவார் என்று கருதப்பட்ட ஜனவரி 27-ம் தேதியே கூட அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட சாத்தியம் உள்ளது.

"அவருக்கு ஏற்பட்ட சுவாசத் தொற்று காரணமாக அவருக்கு இருமலும் காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது. இன்னும் 2-3 நாள்களில் அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடியும்" என்று அவர் சேர்க்கப்பட்டுள்ள பௌரிங் அன்ட் லேடி கர்சன் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மனோஜ் குமார் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டதால், அவர் பெங்களூரு மத்திய சிறையில் இருந்து நேற்று புதன்கிழமை மாலை பௌரிங் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அவரது ஆக்சிஜன் ஏற்பு விகிதம் 70களுக்கு சென்றுவிட்டது. "அதையடுத்து அவருக்கு ஆக்சிஜன் தரப்பட்டது. இப்போது நன்றாக இருக்கிறார். நடக்கிறார்" என்று டாக்டர் மனோஜ் குமார் தெரிவித்தார்.

"சிறைக் கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான விக்டோரியா மருத்துவமனையில் அவருக்கு சி.டி. ஸ்கேன் செய்கிறோம். இது வழக்கமாக செய்வதுதான். கோவிட் பரிசோதனை முடிவு வரவில்லை என்பதால் அவரை நேற்று அங்கு அனுப்ப முடியவில்லை. சி.டி.ஸ்கேன் முடிந்து அவர் மீண்டும் இங்கே கொண்டுவரப்படுவார்" என்று மனோஜ்குமார் தெரிவித்தார்.

சசிகலா தண்டனை பெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல் குற்றவாளி. ஆனால், அவரது மரணத்துக்குப் பிறகே உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்ததால், அவருக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.

இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான சசிகலா தமக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்திவிட்டார். இதன் அடிப்படையில் அவர் 27-ம் தேதி அவர் விடுதலை செய்யப்படவுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்