நிதி நிறுவனங்களையே திகைக்க வைக்கும் கடன் செயலிகள்: என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (09:36 IST)
நிதி நிறுவனங்களையே திகைக்க வைக்கும் கடன் செயலிகள்: என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?
 
தங்களுடைய பெயரைப் பயன்படுத்தி, Wonder Loan என்ற செயலி ஒன்று அதீத வட்டிக்கு பணம் கொடுத்து, தங்கள் பெயரைக் கெடுப்பதாக தனியார் நிதி நிறுவனம் வழக்குத் தொடுத்திருக்கிறது. ஆனால், அந்த நிறுவனம் குறித்த விவரங்களைத் தர கூகுள் மறுப்பதால், உடனடி நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்கிறது காவல்துறை. செயலி மூலம் கடன் பெறும்போது, என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?
 
திண்டுக்கல்லில் இருந்து செயல்பட்டுவருகிறது 'தாய்நாடு பைனான்ஸ்' என்ற தனியார் நிதி நிறுவனம். இந்த நிறுவனம் வாகனக் கடன், பொருட்களை அடகு வைத்துக்கொண்டு கடன் தருவது ஆகியவற்றில் ஈடுபட்டுவருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியில் வங்கி அல்லாத நிதி நிறுவனமாகப் (NBFC) பதிவுசெய்துகொண்டு, நிதிச் செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறது.
 
இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் தேதி இந்த நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் ஒன்று வந்தது. அந்தப் புகாரை அனுப்பியவர், Wonder loan என்ற செயலியை தன் போனில் தரவிறக்கம் செய்து, அதன் மூலம் ஒரு தடவைக்கு 3,010 ரூபாய் என்ற விகிதத்தில் மூன்று முறை கடனாக வாங்கியதாகவும் மொத்தமாக 9,030 ரூபாய் மட்டுமே கடனாகப் பெற்றிருப்பதாகவும் தற்போது 15,000 ரூபாயைத் திரும்பக் கேட்பது எப்படி முறையாக இருக்கும் என கேள்வி எழுப்பியிருந்தார்.
 
அவர் இந்தக் கடனை வாங்கிய இரண்டு மூன்று நாட்களிலேயே மொத்தமாக 15,000 ரூபாயைச் செலுத்தும்படி கடன் வாங்கியவரிடம் சொல்லப்பட்டிருக்கிறது.
 
அடுத்தடுத்த நாட்களிலும் இதே போலக் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதாவது 9,030 ரூபாய் கடனுக்கு 4 நாட்களில் 15,000 ரூபாயைத் திரும்பச் செலுத்தும்படி அந்தக் குறுஞ்செய்திகளில் கூறப்பட்டது.
 
இந்த 15,000 ரூபாயைச் செலுத்தாவிட்டால், அவருடைய மொபைல் போனில் உள்ள எண்களுக்கு எல்லாம் இந்தத் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அவரைப் பற்றி விவரங்கள் எல்லோருக்கும் பகிரப்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த நபர் பயன்படுத்திய செயலியில், தாய்நாடு ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பெயர், முகவரி, மின்னஞ்சல் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருந்தன.
 
இதையடுத்தே அந்த நபர், இந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கேள்வியெழுப்பியிருந்தார். இதைப் பார்த்து அதிர்ந்துபோன, தாய்நாடு ஃபைனான்ஸ் நிறுவனத்தினர், தாங்கள் இதுபோல டிஜிட்டல் செயலி மூலம் கடன் வழங்குவதில்லை என்றும் தங்களுக்கும் 'வொண்டர் லோன்' என்ற செயலிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
தகவல்களை தர மறுக்கும் கூகுள்
இதற்குப் பிறகு, இது போன்று பலரும் மின்னஞ்சல் அனுப்பவே, இந்த விவகாரம் தொடர்பாக ஜூலை 28ஆம் தேதி தமிழ்நாடு சைபர் கிரைம் காவல் துறையில் இந்த நிறுவனம் புகார் அளித்தது.
 
இதற்கிடையில், போபால், கொல்கத்தா, கான்பூர், சென்னை ஆகிய இடங்களில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் இருந்தும், இந்த நிறுவனம் மீது இதுபோல புகார்கள் வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
 
இதற்குப் பிறகு, தாய்நாடு ஃபைனான்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், கூகுள் பிளே ஸ்டோருக்குச் சென்று, அந்தச் செயலி குறித்து எச்சரித்து எழுதியதோடு, அதனை முடக்கும்படி கூகுளிடமும் தெரிவித்தனர்.
 
மேலும் தாய்நாடு பைனான்ஸ் நிறுவனத்தின் இணைய தளத்தில், தாங்கள் இதுபோல டிஜிட்டல் செயலி மூலம் பணம் தருவதில்லை என்றும் குறிப்பிடப்பட்டது.
 
இதற்குப் பிறகு, இந்தப் போலி செயலி குறித்த தகவல்கள் இந்திய ரிசர்வ் வங்கிக்கு அக்டோபர் 13ஆம் தேதி முறைப்படி தெரிவிக்கப்பட்டது.
 
இதற்கிடையில், இந்தச் செயலியில் பணம் பெற்றவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளைத் தொடர்ந்ததால், தாய்நாடு ஃபைனான்ஸ் நிறுவனம் சங்கடத்திற்கு உள்ளானது.
 
உதாரணமாக, தில்லியிலிருந்து ஒரு வழக்கறிஞர் இது தொடர்பாக நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். மேலும், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள காவல் நிலையத்திலிருந்து, இந்தச் செயலி மூலம் கடன் பெற்றவர் தற்கொலை செய்துகொண்டதாகவும், உடனடியாக விசாரணைக்கு ஆஜராகும்படியும் இந்த நிறுவனத்திற்கு சம்மன்கள் வந்தன.
 
ஆந்திர மாநிலத்தில் இந்தச் செயலி மூலம் பணம் பெற்றவர் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, கூகுளை அணுகிய தமிழ்நாடு காவல்துறை, அந்தச் செயலியின் பின்னணியில் இருந்த மின்னஞ்சல் முகவரியைப் பெற்றது. மேலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அந்த ஆப் கடந்த நவம்பரில் நீக்கப்பட்டது.
 
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிய இந்த நிறுவனம் இந்த விவகாரத்தில் காவல்துறை மிக மெதுவாக விசாரணைகளை நடத்திவருவதாகவும் விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிட வேண்டுமென்று கோரியது.
 
இந்த நிலையில்தான், இந்த வழக்கின் விசாரணை எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்த நிலை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
 
அதில் கூகுள் நிறுவனம் போதுமான ஒத்துழைப்பை வழங்காததால், தங்களால் விரைவாகச் செயல்பட முடியவில்லையென காவல்துறை கூறியிருக்கிறது.
 
இந்தச் செயலியைப் பதிவுசெய்யப் பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், கூடுதல் மின்னஞ்சல் முகவரி, அவர்கள் பயன்படுத்திய இணைய தொடர்பின் ஐபி முகவரி ஆகியவற்றை கேட்டு காவல்துறை கடந்த நவம்பர் 21ஆம் தேதி கூகுள் நிறுவனத்திடம் கேட்டதாகவும்.
இதற்கு கடந்த ஜனவரி 26ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் பதிலளித்த கூகுள் நிறுவனம், இந்தத் தகவலைத் தரமுடியாது என்றும் தேவைப்பட்டால், ஐரிஷ் நீதித் துறையைத் தொடர்புகொண்டு, விதிமுறைகளின்படி தரவுகளைப் பெறலாம் என பதிலளித்திருப்பதகாவும் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
 
இதன் காரணமாக, இந்தச் செயலியின் பின்னால் இருந்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை என்றும் இந்தத் தகவல்களைப் பெற கூடுதல் கால அவகாசம் தேவை என்றும் சைபர் கிரைம் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இப்போது நீதிமன்றம் ஆறு வார கால அவகாசம் அளித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.
 
"சம்பந்தமே இல்லாமல் எங்கள் வாடிக்கையாளரின் தரவுகளை எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது தொடர்பாக விரைவான விசாரணை தேவை எனக் கோரியிருக்கிறோம்" என்கிறார் தாய்நாடு ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞரான கனிமொழி மதி.
 
இது போன்ற செயலிகள் எப்படிச் செயல்படுகின்றன?
இந்தச் செயலிகள் செயல்படும் விதத்தைத் தெரிந்துகொண்டால், இந்த விவகாரம் அவ்வளவு சுலபமாக இருக்கப்போவதில்லை புரியும் என்கிறார் சைபர் பாதுகாப்பு வல்லுனரான ஹரிஹரசுதன் தங்கவேலு.
 
"இது போன்ற ஒரு செயலியை உருவாக்குவது மிக எளிது. பிரபலமான வங்கிச் செயலியின் யூஸர் இன்டர்பேஸை திருடி, மிக எளிதாக இந்தச் செயலியை உருவாக்க முடியும். இந்தச் செயலி தொடர்பான ஆட்கள் தமிழ்நாட்டில் இருந்தே செயல்பட மாட்டார்கள். பெரும்பாலும் வடக்கு அல்லது மேற்கு மாநிலங்களில் இருந்துதான் செயல்படுவார்கள். ஒன்றிரண்டு ஏஜென்டுகள் தமிழ்நாட்டில் இருக்கக்கூடும்.
 
இந்தச் செயலியை தங்கள் போன்களில் தரவிறக்கம் செய்வதால் மிரட்டப்படுவர்கள் இரண்டு வகை. ஒரு சில செயலிகளில் உண்மையிலேயே பணம் பெற்றதால், அதீதமாக திரும்பப் பணம் கேட்டு மிரட்டப்படுபவர்கள். இன்னொரு வகையில், உங்களுடைய ஜி பே, பே டிஎம் போன்ற யுபிஐ வேலட்டிற்கு பணத்தை அனுப்பியிருப்பதாகவும் அவற்றை அந்த வேலட் மூலம் செலவழிக்கலாம் என்றும் சொல்லப்படும். ஆனால், அப்படி எந்தத் தொகையும் வந்திருக்காது. வந்திருப்பதாகக் காட்டினாலும் அவற்றை செலவழிக்கவே முடியாது. இருந்தாலும் கொடுத்த பணத்தை வட்டியுடன் திரும்பக் கேட்டு மிரட்டுவார்கள்.
 
பணத்தை அனுப்பும் செயலிகளைப் பொறுத்தவரை, அவற்றில் இருந்து பெரிய அளவில் எல்லாம் பணம் கிடைக்காது. அதிகபட்சமாக ஆறாயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய்வரைதான் கடனாக கொடுப்பார்கள். இந்த கடனைக் கொடுத்த சில நாட்களிலேயே அதாவது 4-5 நாட்களில் இருந்து ஒரு வாரத்திற்குள் அதீதமாக வட்டி, புராசஸிங் கட்டணம் எனச் சொல்லி ஏகப்பட்ட பணத்தைத் திரும்பக் கேட்பார்கள்.
 
இந்தப் பணத்தை திரும்பக் கேட்பதிலும் இரண்டு வகை இருக்கிறது: 'சாப்ட் கலெக்ஷன்', 'ஹார்ட் கலெக்ஷன்'. முதலில் 'சாஃப்ட் கலெக்ஷன்' முறையில் ஆரம்பிப்பார்கள். குறுஞ்செய்தி அனுப்பி தொகையைக் கேட்பார்கள். பிறகு, போன் செய்து கேட்பார்கள். சாதாரணமாகத்தான் பேசுவார்கள். ஒருபோதும் நேரில் ஆட்கள் வரவே மாட்டார்கள்.
 
அதற்கிடையில் அந்த ஆப் மூலமாக நம் போன்களில் உள்ள அனைத்துத் தகவல்களும் திருடப்படும். இதற்குப் பிறகு 'ஹார்ட் கலெக்ஷன்' முறையைப் பயன்படுத்துவார்கள். முதல் கட்டமாக அந்த போன்களில் இருந்து திருடப்பட்ட எண்களில், தாய் - தந்தை, மனைவி போன்ற நெருங்கிய வட்டத்திற்குள் இருக்கும் ஐந்து பேருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
 
"இவர் பணத்தை வாங்கிக்கொண்டு திரும்பத் தர மறுக்கிறார். எங்கள் பணத்தை மட்டும் பெற்றுத்தந்தால் போதும்" என்பது போன்ற செய்திகள் இவர்களுக்கு அனுப்பப்படும்.
 
அடுத்த கட்டமாக, உடன் பணியாற்றுபவர்கள், நண்பர்கள் என 20 பேருக்கு இதே போல செய்தி அனுப்பப்படும். மிக மோசமான கும்பலாக இருந்தால், உங்கள் போனில் உள்ள படங்களில் இருந்து, உங்கள் குழந்தையின் படத்தை தேடி எடுத்து, பணத்தைத் தராவிட்டால் இந்தக் குழந்தையைக் கடத்துவோம் என்று மிரட்ட ஆரம்பிப்பார்கள். இந்தக் கட்டத்தில் வாழ்க்கையே நரகமாகிவிடும்" என்கிறார் அவர்.
 
இதுபோன்ற சிக்கல்களில் இருந்து ஒருவர் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள என்னதான் வழியிருக்கிறது? "முதலில் இதுபோன்ற செயலிகள் மூலம் கடன் பெறவே கூடாது. நேரடியாக வங்கிகளில் இருந்துதான் கடனைப் பெற வேண்டும். வேறு வழியே இல்லாமல் செயலிகள் மூலம் கடனைப் பெறுவதாக இருந்தால், அந்தச் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் எத்தனை நாட்களாக இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது இருக்கிறதா என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். மேலும், அந்தச் சேவையைப் பயன்படுத்தியவர்கள், அந்த சேவை குறித்து எழுதியிருப்பதைப் படிக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் அந்தச் செயலி மூலம் கடன் பெற வேண்டும்" என்கிறார் ஹரிஹரசுதன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்