சூர்யாவின் ஜெய் பீம் படம் எப்படி??

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (09:21 IST)
சூர்யா படத்தின் ஜெய் பீம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள நிலையில் இதன் சினிமா விமர்சனம் பின்வருமாறு.... 

 
நடிகர்கள்: சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், இளவரசு; 
ஒளிப்பதிவு: எஸ்.ஆர். கதிர்; 
இசை: ஷான் ரோல்டன்; 
இயக்கம்: த.செ. ஞானவேல்,
வெளியீடு: அமெஸான் பிரைம் ஓடிடி.
 
விருத்தாச்சலத்தில் உள்ள கம்மாபுரத்தில் 1993 ஆம் ஆண்டு பழங்குடியினத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த விவகாரத்தை பின்னணியாகக் கொண்டு வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் 'ஜெய் பீம்'.
தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டம் ஒன்றில் வசிக்கும் இருளர் பழங்குடியைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (மணிகண்டன்). மனைவி செங்கண்ணி (லிஜோமோல் ஜோஸ்). அந்த ஊர் பெரிய மனிதர் வீட்டில் ஒரு நாள் பாம்பு பிடிக்கச் செல்கிறார் ராஜாக்கண்ணு. சில நாட்களில் அந்த வீட்டில் கொள்ளை நடந்துவிட, ராஜாக்கண்ணுவைத் தேடுகிறது காவல்துறை. அவரைத் தேடும் சாக்கில், அவரது மனைவி, உறவினர்களையும் பிடித்துவந்து துவைத்தெடுக்கிறார்கள் காவல்துறையினர்.
 
ஒரு நாள் ராஜாக்கண்ணு கிடைத்துவிட, குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி அடித்துத் துன்புறுத்துகிறார்கள். பிறகு, ராஜாக்கண்ணுவும் அவருடன் லாக்கப்பில் இருந்த அவரது உறவினர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டதாகச் சொல்கிறது காவல்துறை. இந்த விவகாரத்தைக் கையில் எடுக்கிறார் வழக்கறிஞர் சந்துரு (சூர்யா). இதற்குப் பிறகு, என்ன நடக்கிறதென்பது மீதிக் கதை.
தமிழ்நாட்டில் மிகச் சிறுபான்மையான இருளர் பழங்குடியினர் மீதான காவல்துறையின் அத்துமீறலை மையமாகக் கொண்டு, வணிகரீதியான ஒரு திரைப்படத்தை முயற்சிப்பதற்கே மிகப் பெரிய துணிச்சல் வேண்டும்.
 
பிறகு, அந்த அத்துமீறலையும் நியாயத்தைப் பெறுவதற்கான போராட்டத்தையும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று சிறப்பான சினிமா திரைக்கதையாக உருவாக்க வேண்டும். த.செ. ஞானவேலிடம் அந்தத் துணிச்சலும் இருக்கிறது, சிறந்த சினிமாவாக உருவாக்கும் நேர்த்தியும் இருக்கிறது.
 
படம் துவங்கி சில நிமிடங்களிலேயே தடதடக்க ஆரம்பித்துவிடுகிறது திரைக்கதை. காவல்துறையினர் இருளர் பழங்குடியினரின் பகுதிக்குள் வந்து, அந்த மக்களை இழுத்துச் செல்லும்போது, நம்மையே இழுத்துச் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது காட்சியமைப்பு.
 
இருளர்கள் மீது தொடர்ந்து சுமத்தப்படும் பொய் வழக்குகள், காவல்நிலையத்தில் அவர்கள் மீது நடத்தப்படும் அத்துமீறல்கள், சித்ரவதைகள், மரணங்கள் என ஒவ்வொரு தருணமும் அதிரவைக்கிறது.
பொதுவாக இம்மாதிரியான சித்ரவதைகளையும் பாதிக்கப்பட்டவர்களின் குரலையும் தொடர்ந்து காட்டும்போது சீக்கிரமே ஓர் ஆவணப்படம் பார்ப்பதுபோன்ற உணர்வை ஏற்பட்டுவிடும். ஆனால், இந்தப் படத்தில் கதாநாயகியின் பாத்திரம் உடனடியாக நியாயத்தை நோக்கிப் போராட ஆரம்பிப்பதால், படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து, ஒரு விறுவிறுப்பான த்ரில்லராக மாறுகிறது. எந்த இடத்திலும் கூடுதலாக ஒரு காட்சியோ, வசனமோ இல்லை.
 
அடிப்படையில் பார்த்தால், இந்தப் படம் ஒரு Court - Drama வகையைச் சேர்ந்ததுதான். ஆனால், பாதிக்கப்படும் மக்களின் துன்பமும் நியாயத்தை நோக்கிய அவர்களது போராட்டமும் அவை படமாக்கப்பட்ட விதமும் இந்தப் படத்தை வேறு உயரத்திற்கு நகர்த்தியிருக்கின்றன.
 
இந்தப் படத்தில் இரண்டு விஷயங்கள் முக்கியமாகப்படுகின்றன. ஒன்று, அதிகாரக் கட்டமைப்பு தன்னைச் சார்ந்தவர்களைப் பாதுகாக்க என்னவெல்லாம் செய்யும் என்பதை துலக்கமாகக் காட்டுவது. இரண்டாவதாக, அரசால் அநியாயம் இழைக்கப்பட்டவர்கள் போராடினால், அது ஒரு நெடிய போராட்டமாக இருந்தாலும் உரிய நியாயம் கிடைக்காமல் போகாது என்பதைச் சொல்லி, ஒரு நேர்மறையான உணர்வை ஏற்படுத்துவது. அந்த வகையில் இந்தப் படம் முக்கியமான ஒரு திரைப்படம்.
இயக்குநர் ஞானவேலுக்கு அடுத்தபடியாக படத்தில் பாராட்டத்தக்கவர், நாயகியாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸ். செங்கண்ணியாகவரும் லிஜோமோல், படம் முழுவதையும் ஆக்கிரமித்திருக்கிறார். எந்த இடத்திலும் ஆர்ப்பாட்டமில்லாத அவரது நடிப்பைப் பார்க்கும்போது, இருளர் பழங்குடியைச் சேர்ந்த ஒருவரே அந்தப் பாத்திரத்தில் நடித்திருப்பதாகத்தான் கருதத் தோன்றுகிறது.
 
இதற்கடுத்தபடியாக, சிறப்பாக நடித்திருப்பது நாயகனாக வரும் மணிகண்டன். வேறொருவரை இந்தப் பாத்திரத்தில் நினைத்துப்பார்க்க முடியவில்லை. படத்தில் விசாரணை அதிகாரி பெருமாள்சாமியாக வருகிறார் பிரகாஷ் ராஜ். அவரது நடிப்பைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஒரு காட்சியில், கதாநாயகனை சித்ரவதைசெய்து கொலைசெய்த மூன்று காவலர்களையும், கடந்து செல்லும்போதே அவர் பார்க்கும் பார்வை, அட்டகாசம்.
 
வழக்கறிஞர் சந்துருவாக நடித்திருக்கிறார் சூர்யா. அவருக்கும் ஒரு குறிப்பிடத்தக்கபடம் இது. அரசு வழக்கறிஞராக வருகிறார் குரு சோமசுந்தரம். கேட்கவா வேண்டும்! இந்தப் படத்தில் திரைக்கதையைப் போலவே, மிக வலுவான இரண்டு அம்சங்கள் இசையும் ஒளிப்பதிவும். அதை இருவருமே சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். பாடல்களும்கூட படத்தோடு பொருந்திப்போகின்றன.
 
தமிழின் சிறந்த திரைப்படங்களின் வரிசையில் சேர்கிறது, இந்த "ஜெய் பீம்".

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்