வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்வு - 10 முக்கிய தகவல்கள்!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (14:30 IST)
இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நாடு முழுவதும் உயர்கிறது. 

 
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயுவின் விலை 19 கிலோ சிலிண்டருக்கு 250 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இதுவரையிலான விலை மற்றும் தற்போதைய உயர்வுக்குப் பிறகான விலை நிலவரம் குறித்த 10 முக்கிய தகவல்கள்.
 
இதற்கு முன்னதாக மார்ச் 1-ஆம் தேதியன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 105 ரூபாய் உயர்த்தப்பட்டது. பிறகு மார் 22-ஆம் தேதியன்று 9 ரூபாய் குறைக்கப்பட்டது.
 
இதன்படி, கடந்த இரண்டு மாதங்களில், 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயுவின் விலை 346 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
 
19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, டெல்லியில் மார்ச் 1-ஆம் தேதிப்படி, 2,012 ரூபாய்க்குக் கிடைத்தது. மார்ச் 22-ஆம் தேதி 9 ரூபாய் விலை குறைப்புக்குப் பிறகு 2,003.50 ரூபாய்க்குக் கிடைத்தது.
 
ஆனால், இன்று முதல் டெல்லி விலை நிலவரப்படி, 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரை வாங்குவதற்கு, 2,253 ரூபாய் செலுத்த வேண்டும்.
 
அதேநேரம், கொல்கத்தாவில் 2,087 ரூபாய் செலுத்திக் கொண்டிருந்த இடத்தில், 264 ரூபாய் உயர்ந்துள்ளதால் இனி 2,351 ரூபாய் செலுத்த வேண்டும். மும்பையில், 19 கிலோ வணிக சிலிண்டருக்கு நேற்று வரை 1,955 ரூபாய் செலுத்திக் கொண்டிருந்த இடத்தில், இனி 2,205 ரூபாய் செலுத்த வேண்டும்.
 
சென்னையில் வணிக பயன்பாட்டிற்காக சிலிண்டர் வாங்கும் வாடிக்கையாளர் முன்னர் 2,137.50 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. தற்போது 268.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் இனி, 2,406 ரூபாய் செலுத்த வேண்டும்.
 
உணவகங்கள், தேநீர் கடைகள் போன்றவையே 19 கிலோ சிலிண்டரின் மிகப்பெரிய வாடிக்கையாளர் பிரிவாக உள்ளன.
 
அதுபோக, மானியமில்லாத 14.2 கிலோ சிலிண்டர்களின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. 50 ரூபாய் உயர்த்தப்பட்ட மார்ச் 22-ஆம் தேதியின் விலை நிலவரப்படி அதன் விலை டெல்லியில் 949.50 ரூபாய். கொல்கத்தாவில் 976 ரூபாய். மும்பையில் 949.50 ரூபாய். சென்னையில் 965.60 ரூபாய்.
 
அதேநேரம், விமானத்திற்கான எரிபொருளின் விலையும் ஒரு லிட்டருக்கு 2,258.54 ரூபாய் உயர்ந்துள்ளது. டெல்லியில், தற்போது அதன் விலை, 1,12,924.83 ரூபாயாக உள்ளது என்று அரசுக்குச் சொந்தமான எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களின் விலை விவரங்கள் அறிவிப்பு கூறுவதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
 
நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்ந்து வரும் நிலையில், நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவருடைய ட்விட்டர் பக்கத்தில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பூட்டான், நேபாள் ஆகிய நாடுகளில் உள்ள பெட்ரோல் விலையோடு இந்தியாவில் பெட்ரோலின் ஒப்பிட்டு ட்வீட் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்