`இளவரசி லத்திஃபா உயிருடன் இருக்கும் ஆதாரம் இதுவரை காண்பிக்கப்படவில்லை`

Webdunia
சனி, 6 மார்ச் 2021 (10:33 IST)
துபாய் ஆட்சியாளரின் மகள் உயிரோடு இருப்பதற்கான எந்த ஆதாரங்களையும் தற்போதுவரை பார்க்கவில்லை என ஐநா தெரிவித்துள்ளது.
 
ஐக்கிய அரபு எமிரேட்ஸிடமிருந்து இரு வாரங்களுக்கு முன் அதற்கான ஆதாரங்களை கோரியிருந்தது ஐ.நா.
 
துபாய் இளவரசி லத்திஃபா அல் மக்தூம் 2018ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றார்.
 
பிபிசி பனோரமாவிடம் பகிர்ந்த வீடியோவில், கமாண்டோக்கள் தன்னை படகிலிருந்து இழுத்து சென்று தடுப்புக் காவலில் அடைத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
 
அப்போதிலிருந்து அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை.
 
துபாயின் ராஜ குடும்பம், லத்திஃபா பாதுகாப்பாக `வீட்டில் கவனித்து கொள்ளப்படுகிறார்` என்று தெரிவித்திருந்தது.
 
லத்திஃபாவின் காணொளி, ஐ.நா விசாரணைக்கு வித்திட்டது. கடந்த மாதம் இளவரசி லத்திஃபா உயிரோடு இருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸிடம் கோரியுள்ளதாக ஐநா தெரிவித்தது.
 
ஆனால் அது தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை என வெள்ளிக்கிழமை ஐ.நா தெரிவித்தது.
 
அதன் செய்தி தொடர்பாளர் ராபர்ட் கொல்விலே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குழுவுடன் ஜெனிவாவில் சந்திப்புகள் நடந்ததாக தெரிவித்தார். ஆனால் லத்திஃபா உயிருடன் உள்ளாரா என்பது குறித்த ஆதாரங்கள் கிடைத்ததா என்று கேட்டதற்கு `இதுவரை இல்லை` என அவர் பதிலளித்தார்.
 
லத்திஃபாவின் தந்தையான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் உலக பணக்காரர்களில் ஒருவர். துபாயின் ஆட்சியாளர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணை அதிபர்.
 
இளவரசி லத்திஃபா குறித்து நமக்கு என்ன தெரியும்?
2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக தனது நண்பர்களின் துணையுடன் துபாயை விட்டு தப்பிச் செல்ல முயன்றதாக லத்திஃபா தெரிவித்தார்.
 
"நான் வாகனம் ஓட்ட அனுமதியில்லை, துபாயை விட்டு வெளியேறவோ பயணம் செய்யவோ அனுமதியில்லை" என தான் தப்பிச் செல்வதற்கு முன்னர் பதிவு செய்த காணொளி ஒன்றில் அவர் கூறியிருந்தார்.
 
ஆனால் சில தினங்களுக்கு பிறகு, இந்திய பெருங்கடலில் படகிலிருந்து கமாண்டோக்களால் பிடிபட்டதாக அவர் தெரிவித்தார். பின் அவர் துபாய்க்கு கொண்டு வரப்பட்டதாகவும் அப்போதிலிருந்து அவர் துபாயில் உள்ளதாகவும் தகவல் வெளி வந்தது.
 
இந்த நிலையில், லத்திஃபாவின் நலனுக்காக தான் செயல்படுவதாக லத்திஃபாவின் தந்தை தெரிவித்தார். துபாய் ராஜ குடும்பத்திலிருந்து கடந்த மாதம் வந்த அறிக்கை அவர் `வீட்டில் கவனித்து கொள்ளப்படுகிறார்` என மீண்டும் வலியுறுத்தியது.
 
"லத்திஃபா தொடர்ந்து நலமுடன் இருக்கிறார். அவர் சரியான நேரத்தில் பொது வாழ்க்கைக்கு திரும்புவார் என நாங்கள் நம்புகிறோம்" என அந்த அறிக்கை தெரிவித்தது.
 
தான் பிடிப்பட்ட ஒரு வருடத்திற்குள் பல காணொளிகளை இளவரசி லத்திஃபா பதிவு செய்தார்.
 
அதில் பலவற்றின் காட்சி அமைப்பு, அவர் கழிவறையில் இருந்தபடி பதிவு செய்தது போல இருந்தது. ஒரு காணொளியில், "ஒரு கதவை மட்டும்தான் அவரால் அடைக்க முடியும்," என அவர் கூறியிருந்தார். கீழ்கண்ட செய்திகளில் லத்திஃபா அதை விளக்குகிறார்.
 
•தன்னை படகிலிருந்து அழைத்து சென்ற கமாண்டோக்களிடம் போராடியதாகவும், அவர்களை உதைத்தாகவும், சண்டையிட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த கமாண்டோ ஒருவரின் கையில் அவர் அலறும் வரை கடித்து விட்டதாக அவர் கூறினார்.
 
•மயக்கமருந்து ஊசி போடப்பட்ட பிறகு, தான் மயக்கமடைந்ததாகவும், தனியார் ஜெட் விமானம் ஒன்றில் தான் திரும்ப அழைத்து வரப்பட்டதாகவும், துபாயில் அது தரையிறங்கும் வரை தான் எழுந்திருக்கவில்லை என்றும் லத்திஃபா தெரிவித்தார்.
 
•மருத்துவ உதவியோ சட்ட ரீதியான உதவியோ கிடைக்கப்பெறாமல், ஜன்னல் மற்றும் கதவுகளை கொண்ட ஒரு தனி வீட்டில் காவலில் இருந்ததாக லத்திஃபா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்