ஈஸ்டர் தாக்குதல்: நஷ்ட ஈடாக ரூ.10 கோடி செலுத்த இயலாது - மைத்திரிபால சிறிசேன

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2023 (23:27 IST)
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்டஈட்டை வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உள்ளிட்ட ஐவருக்கு, இலங்கை உயர்நீதிமன்றம் கடந்த 12ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.
 
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபாயும், முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன,  ஆகியோருக்கு 7.5 கோடி ரூபாயும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 5 கோடி ரூபாயும், முன்னாள் புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் ஒரு கோடி ரூபாயும் நட்டஈடாக செலுத்த வேண்டும் என்பது நீதிமன்றம் உத்தரவு.
 
 
இந்த நட்டஈட்டு தொகையானது, தமது சொந்த பணத்திலிருந்து செலுத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை பல்வேறு தரப்பினர் வரவேற்றிருந்த நிலையில், உத்தரவுக்கு அமைய குறித்த நபர்கள் நட்டஈட்டை எவ்வாறு வழங்குவார்கள் என்ற கேள்விகளையும் எழுப்பியிருந்தனர்.
 
நட்டஈட்டை செலுத்தாதிருக்க சிறிசேன முயற்சி - கொழும்பு பேராயர் இல்லம் 
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பின் பிரகாரம், நட்டஈடாக செலுத்த வேண்டிய 10 கோடி ரூபாயை செலுத்தாதிருப்பதற்கு முயற்சித்து வருகின்றமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு பேராயர் இல்லம் தெரிவிக்கின்றது.
 
கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட கொழும்பு பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் அருட்தந்தை ஜுட் கிரிஷாந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்ட தண்டனையை இல்லாது செய்வதற்கு, நாடாளுமன்ற அதிகாரத்தை பயன்படுத்த அவர்  தயாராகி வருகின்றமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
 
''7 நீதியரசர்கள் குழாமினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் ஊடாக, இந்த நாட்டை போலியாக ஆட்சி செய்ய முடியாது என்பதனை காணக்கூடியதாக இருக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து சில விடயங்களை அறிந்துக்கொள்ள முடிகின்றது. மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்ட அந்த தண்டனையை இல்லாது செய்வதற்கு நாடாளுமன்ற அதிகாரத்தை பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடல் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக அறிய முடிகின்றது.
 
அவ்வாறான விடயங்களை செய்ய முடியாது. அந்த தீர்ப்பை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். தண்டனைக்கு மைத்திரிபால சிறிசேனவை கீழ்படிய வைக்க வேண்டும்" என அருட்தந்தை ஜுட் கிரிஷாந்த தெரிவிக்கின்றார்.
 
நீதிமன்றத்தினால் தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதல் தடவையாக நேற்றைய தினம் பொது வெளியில் கருத்து தெரிவித்தார்.
 
உயர்நீதிமன்றத்தினால் தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பின் ஊடாக செலுத்த வேண்டிய 10 கோடி ரூபாய் பணத்தை செலுத்தும் பின்புலம் தனக்கு கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கிக்னறார். எனினும், நீதிமன்ற தீர்ப்பை தான் மதித்து, தனக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பணத்தை சேகரித்து, இந்த நட்டஈட்டுத் தொகையை செலுத்த தயாராகி வருவதாக அவர் கூறுகின்றார்.
 
''நான் சட்டத்தை மதிக்கின்றேன். இந்த சம்பவம் நேரும் தருணத்தில், நான் சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தேன். இந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்த போதிலும், தனக்கு இது தொடர்பில் எந்தவொரு நபரும் அறிவிக்கவில்லை என நான் தொடர்ச்சியாக கூறி வருகின்றேன். இந்த தீர்ப்பில் 85 பக்கங்களுக்கு தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது. 
 
இந்த தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்த போதிலும், ஜனாதிபதி எந்தவொரு விதத்திலும் இது குறித்து அறிந்திருக்கவில்லை என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால், 10 கோடி ரூபாயை செலுத்த ஏன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என நீங்கள் சிந்திக்க முடியும்?. ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற அதிகாரிகள், ஏதேனும் ஒரு தவறிழைக்கும் பட்சத்தில், அதற்கு ஜனாதிபதியும் பொறுப்பு கூற வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் எழுதப்பட்டுள்ளது. 
 
10 கோடி ரூபாய் நட்டஈட்டை செலுத்துவதற்கு எந்தவொரு வகையிலும் பொருளாதார பின்புலத்தை நான் கொண்டிருக்கவில்லை. எமக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பணத்தை சேர்ப்போம் என நானும், எனக்கு நெருங்கியவர்களும் தீர்மானித்துள்ளோம். 
 
எனக்கு எந்தவொரு வருமானமும் கிடையாது. நான் ஜனாதிபதியாக இருந்த ஐந்து வருட காலத்திலும், எனது சொத்து விபரங்களை நாடாளுமன்றத்திடம் வெளிப்படுத்தியுள்ளேன். தேவை ஏற்படுமாயின், தகவலறியும் சட்டத்தின் ஊடாக அதனை பெற்றுக்கொண்டு, பார்வையிட முடியும்." என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.
 
பெரும் தொழிலதிபரான சிறிசேன சகோதரர் சொல்வது என்ன?
 
மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர், இலங்கையின் பிரதான தொழிலதிபர். மிகப் பிரமாண்ட அரிசி ஆலை, காணி விற்பனை, ஹோட்டல் வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடம் பதித்து, இலங்கையின் பிரமாண்ட தொழிலதிபராக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான டட்லி சிறிசேன விளங்குகின்றார்.
 
 
நாடு முழுவதும் அரிசி தேவையில் பெரும் பகுதியை, டட்லி சிறிசேன விநியோகித்து வருகின்றமையின் ஊடாக, நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாரிய பங்களிப்பை வழங்குகின்றார். இவ்வாறான பல்வேறு துறைகளின் தடம் பதித்து, மிக செல்வந்தராக காணப்படும் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேன, தனது மூத்த சகோதரனான மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அண்மையில் கருத்து வெளியிட்டார்.
 
ஊடகவியலாளர் :- ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்களின் அண்ணாவிற்கு நட்டஈடு செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. அவருக்கு நீங்களா பணம் வழங்க போகின்றீர்கள்?
 
டட்லி சிறிசேன :- நீதிமன்ற தீர்ப்பில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. தம்பியிடமிருந்து பணத்தை பெற்று, நட்டஈட்டை வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை. தேவையற்ற கேள்விகளை என்னிடம் எழுப்ப வேண்டாம்.
 
ஊடகவியலாளர் :- அப்படியென்றால், அவருக்கு அந்தளவு தொகையை செலுத்த முடியுமா?
 
டட்லி சிறிசேன :- அதனை அவரிடமே கேட்க வேண்டும். அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் கேட்பது குறித்து நான் கவலை அடைகின்றேன்.
 
உலகையே உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்
இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டு வெடிப்பு சந்தர்ப்பத்தில், ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன கடமையாற்றியிருந்தார். மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் சம்பவங்களில், தற்கொலை குண்டுதாரிகள் 8 பேர் அடங்கலாக 277 பேர் உயிரிழந்திருந்தனர். அத்துடன், இந்த குண்டுத் தாக்குதல் சம்பவங்களில் சுமார் 400 பேர் காயமடைந்திருந்தனர்.
 
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான 12 மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் கடந்த 12-ம் தேதி வழங்கியுள்ளது.
 
ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதலை தவிர்ப்பதற்கு தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து, பாதிக்கப்பட்ட தரப்பினரினால் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
 
2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமையின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, முன்னாள் தேசிய புலனாய்வு பிரதானி சிசிர மென்டீஸ் ஆகியோர் தமது பொறுப்புகளை தவறவிட்டுள்ளதாக உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்