கொரோனா வைரஸ் பரவல்: இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழைய செப்டம்பர் 7 முதல் தடை

Webdunia
புதன், 2 செப்டம்பர் 2020 (16:54 IST)
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து இந்தியா, இந்தோனீசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள்  மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே விசா பெற்றிருப்பவர்களுக்கும் இந்த தடை பொருந்தும்.
 
இம்மூன்று நாடுகளிலும் அண்மைக் காலத்தில் 'கோவிட்-19' நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை மலேசிய அரசு சுட்டிக்  காட்டியுள்ளது.
 
செப்டம்பர் 7ஆம் தேதி முதல் இந்த தடை அறிவிப்பு அமலுக்கு வருவதாக மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது  தெரிவித்தார்.
 
இதையடுத்து மலேசியாவில் நீண்ட காலம் தங்கியிருப்பதற்கான விசா வைத்துள்ள இந்தியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கும் இந்தியாவைச் சேர்ந்த  மாணவர்களுக்கும் சிக்கல் எழுந்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக மலேசியாவில் இருந்து இந்தியாவுக்குச் சென்றவர்கள், எதிர்வரும் 7ஆம் தேதிக்குள் மீண்டும் மலேசியா திரும்பவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
 
இந்தியா உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளிலும் வைரஸ் தொற்று அதிகரித்ததால் மலேசிய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
 
இதேபோல் ஏனைய பிற நாடுகளின் வைரஸ் தொற்று நிலவரத்தையும் மலேசிய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை மற்ற நாடுகளின் மீதும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றார்.
 
“வேறு எந்தெந்த நாடுகளில் வைரஸ் தொற்று அதிகரிக்கிறது என்பதைக் கவனித்த பிறகு இதேபோன்ற கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். எனினும் தற்போது இந்தியா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு மட்டுமே இந்தக் கட்டுபாடு பொருந்தும்.
 
"வெளிநாடுகளில் இருந்து மலேசியாவுக்கு வருபவர்களால் வைரஸ் தொற்று இறக்குமதியாகிவிடக் கூடாது என்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம். வேறெந்த  வகையில் வைரஸ் தொற்று இறக்குமதியாவதை தடுக்க முடியும் என்பது தொடர்பில் மலேசிய சுகாதார அமைச்சின் ஆலோசனை அறிக்கையைக்  கேட்டிருக்கிறோம்,” என்றார் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி.
 
எனினும் இந்தியா உள்ளிட்ட மூன்று நாடுகளிலிருந்தும் மலேசியா திரும்பும் மலேசியர்களுக்குக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்திய அவர்,  சொந்த குடிமக்களை நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்தால் அது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகிவிடும் என்று சுட்டிக் காட்டினார்.
 
இதற்கிடையே எதிர்வரும் குளிர்காலத்தின்போது உலகின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும், அத்தகைய சூழ்நிலையை  எதிர்கொள்ள மலேசியா தயாராகி வருவதாகவும் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
 
மலேசியாவில் தற்போது வைரஸ் தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளபோதிலும் தென்கொரியா, ஜப்பான், ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் வைரஸ்  தொற்று திடீரென அதிகரித்துள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்றார் அவர்.
 
“குளிர்காலத்தில் வைரஸ் தொற்று அதிகரிக்கும் என்பதே நமது கவலை. எனவே, அத்தகையதொரு நிலைமையை எதிர்கொள்ள மலேசியா 4 மாதங்களுக்கு முன்பே  தயாராகி வருகிறது,” என்று நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
 
மலேசியாவில் பலி எண்ணிக்கை 128ஆக அதிகரிப்பு

இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை மலேசியாவில் 127ஆக அதிகரித்துள்ளது.
 
கடந்த 24 மணி நேரத்தில் 14 புதிய 'கோவிட்-19' தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
நேற்று மேலும் ஒரு நோயாளி மரணம் அடைந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 128 ஆக உயர்ந்திருக்கிறது.
 
நாட்டில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,354 என்றும், நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9,075 என்றும்  மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
 
தற்போது 151 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் கொவிட்-19 நோய்க்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்றும், அவர்களில் 5 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்