கொரோனா வைரஸ்: எளிய சினிமா கலைஞர்களின் நிலை இதுதான் Corona Kollywood Situation

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (13:50 IST)
கொரோனா தொற்றினை தவிர்ப்பதற்காக இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், அனைத்து இந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் மாமன்றம் உட்பட அனைத்து அமைப்புகளும் திரைப்படப் பணிகளைக் கடந்த 19ஆம் தேதி முதல் நிறுத்தி வைப்பது என முடிவெடுத்துள்ளதாகவும், மேலும் திரைப்படம், தொலைக்காட்சி, விளம்பரப் படங்கள் போன்ற அனைத்துப் பிரிவு திரைப்படப் பணிகளையும் நிறுத்து வைப்பது எனவும் முடிவு செய்துள்ளதாகவும் ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு திரைப்பட மற்றும் டிவி வெளிப்புற லைட்மேன் சங்கத்தின் தலைவர் செந்தில் குமாரிடம் பிபிசி தமிழுக்காக பேசிய பேசிய போது,

'எங்களுடைய ஊழியர்கள் தினமும் ஃபோன் செய்து புலம்புகிறார்கள். தினசரி கிடைக்கிற 850 ரூபாய் சம்பளத்தை வைத்துத் தான் அவர்களுடைய குடும்பமே பிழைத்துக் கொண்டிருந்தது. தற்போது அவர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டது. கொரோனாவை காரணமாக காட்டி ஷூட்டிங்கை நிறுத்தியதற்குப் பதில் ஷூட்டிங் நடந்து அங்கே நாங்கள் கொரோனா பாதித்துச் செத்துப் போகக் கூடத் தயாராக இருக்கிறோம் என்கிறார்கள். வாடகை குறைவாக இருக்கும் என பலரும் சென்னைக்கு வெளியில் தான் வீடு வாடகை எடுத்து குடும்பத்துடன் வசிக்கிறார்கள். அடுத்த மாதம் வாடகை பணத்தை அவர்கள் எப்படிக் கொடுப்பார்கள்? வாடகையை விடுங்கள்.. அன்றாடத் தேவைகளைக் கூட அவர்களால் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் தான் இருக்கிறார்கள்.

ஷூட்டிங்கில் பணம் ஒழுங்காக தரவில்லை என்றால் தான் புகார் கொடுக்க என்னை அழைப்பார்கள். ஷீட்டிங்கை நிறுத்தி இரண்டு நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் பலர் என்னை அழைத்து ஏதாவது செய்யுங்கள் என்கிறார்கள்.

என்னால் என்ன செய்ய முடியும்? ஒருவருக்கு 1000 ரூபாய் கொடுக்க நினைத்தால் கூட கிட்டத்தட்ட 15லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. அவ்வளவு பணத்தை எங்களுடைய சங்கத்தால் எப்படி கொடுக்க இயலும். இது தொடர்பாக ஃபெப்ஸி தலைவர் ஆர். கே. செல்வமணியிடம் பேச நினைத்திருக்கிறோம்.
பத்து நாட்கள் ஷூட்டிங் நடைபெறாது என்றாலும் ஓரளவாவது அவர்களை சமாளிக்க சொல்லலாம். காலவரையறை இல்லாமல் எனக் கூறும்போது தான் சிக்கல் ஏற்படுகிறது. எத்தனை நாட்கள் கடன் வாங்குவார்கள். அந்தக் கடனை அவர்களால் எப்படி திரும்ப கொடுக்க இயலும். பெரிய நடிகர்கள் யாராவது முன்வந்து அவர்களுக்கு பணரீதியாக உதவிகள் செய்யாவிட்டாலும், அரிசி மூட்டை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்கவாவது உதவி செய்யலாம்.

நான் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 20 லைட்மேன்கள் இறந்திருப்பார்கள். அவர்களில் கிட்டத்தட்ட பத்து பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது. மருந்து, மாத்திரைகள் தொடர்ந்து உட்கொள்ளக் கூடிய லைட்மேன்கள் சிலர் இருக்கின்றனர். மருந்து, மாத்திரை வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல் அவர்கள் கஷ்டப்படுகிறார்கள். இன்னும் சிலர் வேலையின்மை காரணமாக சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார்கள்.

அரசு தரப்பிலிருந்து நலிவடைந்த எங்களைப் போன்ற தொழிலாளர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் அனைவருடைய ஒற்றை கோரிக்கை' என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்