இலங்கை போலீஸ் ஒருவர் காலணியுடன் இந்து கோயிலுக்குள் சென்றதாக சர்ச்சை

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (23:33 IST)
இலங்கை போலீஸ் ஒருவர் காலணியுடன் இந்து கோயிலுக்குள் சென்றதாக சர்ச்சை
யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங்களுக்குள் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பாதணியுடன் பிரவேசித்த சம்பவம் பாரிய எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
இலங்கை போலீஸ் மாஅதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை இன்று (13) மேற்கொண்டிருந்தனர்.
 
இதன்போது, போலீஸ் மாஅதிபருடன் சென்ற உயர் போலீஸ் அதிகாரியொருவர், பாதணியுடன் ஆலயத்திற்குள் சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படமொன்றை பகிர்ந்து, அதிகளவானோர் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.
 
இவ்வாறு பாதணியுடன் ஆலயத்திற்குள் செல்லும் போலீஸ் அதிகாரியின் புகைப்படங்கள் இன்று முற்பகல் முதல் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.
 
யாழ்ப்பாணம் − தொண்டமனாறு செல்வசந்நிதி ஆலயம் மற்றும் வல்லிபுர ஆழ்வார் ஆலயம் ஆகிய ஆலயங்களுக்கே போலீஸ் மாஅதிபர் இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.
 
இந்த இரண்டு ஆலயங்களும், இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்கள் என்பது விசேட அம்சமாகும்.
 
இந்திய ராணுவத் தளபதியின் இலங்கை பயணம்: சீனாவை ஓரங்கட்டும் முயற்சியா?
இலங்கை அரசு விழாவில் மீண்டும் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழி - என்ன நடந்தது?
இவ்வாறு வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களுக்குள், போலீஸ் அதிகாரி பாதணியுடன் சென்றமை, ஆலயத்தின் மகிமையை அவமதிப்பதாக இந்துக்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.
 
உண்மைக்கு புறம்பானது - போலீஸ்
 
யாழ்ப்பாணத்தில் போலீஸ் உயர் அதிகாரியொருவர் பாதணியுடன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவில்லை என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.
 
இந்த சம்பவம் தொடர்பில் பிபிசி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
குறித்த போலீஸ் அதிகாரி ஆலய நுழைவாயிலிலேயே தமது கடமைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
 
அதைவிடுத்து, ஆலயத்திற்குள் சென்றதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
 
போலீஸார் கடமைகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் மேல் சட்டையை கழற்ற கூடாது என்ற போதிலும், யாழ்ப்பாணம் − நல்லூர் ஆலயத்திற்குள் போலீஸ் அதிகாரிகள் செல்லும் போது, மேல் சட்டையை கழற்றுவதாக அவர் கூறினார்.
 
அது இந்து மதத்திற்கு போலீஸார் வழங்கும் கெளரவம் எனக் கூறிய அவர், ஆலய நுழைவாயிலுக்கு அருகில் போலீஸ் அதிகாரி சென்றமை கூட தவறுதலாக இடம்பெற்ற ஒன்று என தெரிவித்தார்.
 
தமது அதிகாரிகள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனைத்து மதங்களையும் கெளரவத்துடன் மதிப்பார்கள் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்