தூங்கிக் கொண்டே மணிக்கு 150 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய நபர் மீது வழக்கு

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (10:17 IST)
பகுதியளவு தானாக இயங்கக்கூடிய டெஸ்லா கார் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்க, அதில் இருந்த ஓட்டுநரும் சக பயணியும் தூங்கியதாக கனடாவில் வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளது.

அல்பர்டாவில் நடந்த இச்சம்பவத்தில், காரின் முன் இருக்கைகள் இரண்டும், முழுவதுமாக சரிந்திருந்து, அதில் ஓட்டுநரும், சக பயணியும், நல்ல உறக்கத்தில் இருந்ததாக போலீஸசார் தெரிவிக்கின்றனர்.
 
டெல்ஸா மாடல் எஸ் ரக காரை போலீஸார் கண்டறிந்தபோது, அந்த கார் மணிக்கு 140-150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
 
காரை ஓட்டிச்சென்ற பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த 20 வயதான நபர் மீது ஆபத்தான வகையில் வாகனத்தை ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
கார் எந்த வழியாக சென்று கொண்டிருக்கிறது என்று யாரும் பார்க்கவில்லை. காரில் யாரும் இருந்ததாகவே தெரியவில்லை. முன் எந்த வாகனமும் இல்லை என்பதால், அந்த கார் வேகமாக சென்று கொண்டிருந்தது என சிபிசி செய்தியிடம் போலீஸ் அதிகாரி டாரி டர்ன்புல் தெரிவித்தார்.
 
"நான் 23 ஆண்டுகளாக காவல்துறையில் இருக்கிறேன். பெரும்பாலும் போக்குவரத்து காவல் அதிகாரியாகவே இருந்திருக்கிறேன். இந்த சம்பவம் போல ஒன்றை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. இந்த அளவிற்கு தொழில்நுட்பம் இருந்ததில்லை என்பதும் இருக்கிறது" என அவர் கூறினார்.
 
டெஸ்லா கார்கள், இரண்டு நிலை ஆட்டோ பைலட் செயல்பாடு கொண்டவை. ஆனால், ஓட்டுநர் எப்போதும் விழிப்புடனே இருப்பது அவசியம்.
 
முழுவதுமே தானாகவே இயங்கக்கூடிய கார், இந்தாண்டு இறுதிக்குள் தயாரித்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்  தெரிவித்திருந்தார்.
 
ஆனால், அதனை உலகிற்கு அறிமுகப்படுத்தி பரிசோதிக்கும் முன், ஒரு சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்