தென் கொரியாவில் ஒரு குழந்தை பெற்றால் ரூ.1.35 லட்சம் ஊக்கத் தொகை - எப்போது? ஏன்?

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (17:07 IST)
தென் கொரியாவில் 2022ம் ஆண்டு முதல் குடிமக்கள் ஒவ்வொரு குழந்தை பெற்றுக் கொள்வதற்கும் இந்தியப் பண மதிப்பில் ரூ.1.35 லட்சம் அளவுள்ள ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. இது தவிர ஓராண்டுக்கு குழந்தை வளர்ப்புக்கும் நிதியுதவி தரப்படவுள்ளது.

இந்தியா, சீனா போன்ற நாடுகளில் மக்கள் தொகை அடர்த்தியும், பெருக்கமும் பிரச்சனையாக உள்ள நிலையில், இன்னொரு ஆசிய நாடான தென் கொரியா ஏன்  இப்படி ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது? அவர்களுக்கு என்னதான் பிரச்சனை?
 
கடந்த 2020-ம் ஆண்டில், தென் கொரியாவில் பிறந்தவர்கள் எண்ணிக்கையை விட இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியிருக்கிறது. இப்படி பிறந்தவர்கல்  எண்ணிக்கை குறைவாக இருப்பது இதுவே அங்கு முதல் முறை.
 
ஏற்கனவே தென் கொரியாவில் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கும் நிலையில், இந்த செய்தி அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
 
கடந்த ஆண்டு அந்த நாட்டில் மொத்தம் 2,75,800 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள்; சுமார் 3,07,764 பேர் இறந்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல், இந்தப் பிறப்பு  எண்ணிக்கை, 2019-ம் ஆண்டை விட 10 சதவீதம் குறைவு.
 
தென் கொரிய உள்துறை அமைச்சகம், தங்கள் அடிப்படைக் கொள்கையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான நெருக்கடியை இந்தப் புள்ளிவிவரங்கள்  ஏற்படுத்தியுள்ளன.
 
மக்கள் மக்கள் தொகை பெருகும் விகிதம் குறைவாக இருக்கவேண்டும் என்று விரும்பும் நாடுகள் இருக்கலாம். ஆனால், மொத்த மக்கள் தொகையே குறையத் தொடங்கும்போது, அது ஒரு நாட்டின் மீது விவரிக்க முடியாத அழுத்தத்தைக் கொடுக்கும்.
 
தென் கொரியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது தொழிலாளர் பற்றாக்குறையை உருவாக்கும். இது தென் கொரியாவின் பொருளாதாரத்தில்  நேரடிப் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
 
பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் கடந்த மாதம் சில கொள்கைத் திட்டங்களை அறிவித்தார் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன். அதில்  குடும்பங்களுக்கான பண ஊக்கத் தொகையும் ஒன்று.
 
இந்த திட்டத்தின் கீழ், 2022-ம் ஆண்டில் இருந்து பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு மில்லியன் வொன் (தென் கொரிய பணத்தின் பெயர் வொன்) வழங்கப்படும். இது போக குழந்தை பிறந்து ஒரு வயது ஆகும் வரை மாதாமாதம் 3 லட்சம் வொன் வழங்கப்படும்.
 
2025-ம் ஆண்டில் மாதாமாதம் வழங்கப்படும் உதவித் தொகையை, 5,00,000 வொன்னாக அதிகரிக்க இருக்கிறது தென் கொரிய அரசு.
 
தென் கொரியாவின் பிறப்பு விகிதம் குறைய காரணம் என்ன?
 
பொதுவாக, தென் கொரியாவில் பெண்கள் தங்கள் வேலை மற்றும் மற்ற வாழ்கைத் தேவைகளை சமநிலையில் வைத்துக் கொள்வதில்லை.
 
ஹ்யுன் யூ கிம் என்கிற பெண்ணும் இதில் ஒருவர். இவருக்கு பெரிய குடும்பம் வேண்டும் என ஆசை, ஆனால் தென் கொரியாவில் நிலவும் சூழல்,  குடும்பங்களுக்குத் தகுந்தாற்போல் இல்லை. இப்போது குழந்தை பெற்றுக் கொள்வதை மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கிறார் கிம்.
 
இவர் சமீபத்தில்தான் ஒரு புதிய வேலையில் சேர்ந்தார். பேறு காலத்துக்கு விடுப்பு எடுப்பது குறித்த கவலையில் இருக்கிறார்.
 
"முதலில் சிறப்பாக வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வது நல்லது என மக்கள் என்னிடம் கூறுகிறார்கள்" என கிம் பிபிசியிடம் கூறினார்.
 
தென் கொரியாவில் அதிகரித்து வரும் ரியல் எஸ்டேட் விலையும், பிறப்பு விகிதம் குறைவதற்கு ஒரு முக்கிய காரணம்.
 
அதிகரிக்கும் ரியல் எஸ்டேட் விலை
 
நிலம் மற்றும் வீடுகளின் விலை அதிவேகமாக அதிகரிப்பது, இளம் ஜோடிகள் திருமணம் செய்துகொள்வது மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வது போன்ற நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக இல்லை.
 
"தென் கொரியாவில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால், அவர்களுக்குச் சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும். இது தற்போது தென் கொரியாவில்  சாத்தியமில்லாத கனவாகிறது" என்கிறார் கிம்.
 
அரசு அறிவித்திருக்கும் ஊக்குவிப்புத் திட்டங்கள் தன்னை கவரவில்லை என்கிறார் கிம்.
 
தென் கொரியா, குழந்தையை வளர்ப்பது என்பது மிகவும் செலவு பிடிக்கும் வேலை. அரசு கொடுக்கும் சில நூறாயிரம் வொன், எங்கள் பிரச்சனையைத் தீர்க்காது"  என்றார் ஹ்யுன் யூ கிம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்