சீனாவில் கனமழையால் 25 பேர் பலி: மஞ்சள் நதியில் பெருவெள்ளம்!

வியாழன், 22 ஜூலை 2021 (12:03 IST)
சீனாவின் ஜங்ஜோ நகரில் உள்ள ஒரு பாதாள மெட்ரோ ரயில் நிலையத்தில் புகுந்த வெள்ள நீர் அங்குள்ள ரயில்களுக்கு உள்ளும் புகுந்தது. இதனால் பயணிகள் 12 பேர் இறந்தனர்.

 
ரயில் பெட்டிக்குள் இடுப்பளவு நீரில் பயணிகள் நிற்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ரயில் பேட்டியின் மேல் பகுதியைப் பிடித்துக்கொண்டு வெள்ளத்தை பயணிகள் தவிர்க்க முயல்வதும் அந்தக் காணொளிகளில் பதிவாகியுள்ளன.
 
ரயில் பெட்டிக்குள் வெள்ளம் மேலும் அதிகரித்தால் உள்ளே இருப்பவர்கள் நீரில் மூழ்கி இறந்து போக நேரலாம் என்ற அச்சமும் நிலவியது. பல மணி நேர பதற்றம் மற்றும் போராட்டத்துக்கு பின்னர் மீட்புதவிப் பணியாளர்கள் ரயில் பெட்டியின் மேல்புறத்தை உடைத்து உள்ளே சிக்கியிருந்த சுமார் 500 பயணிகளை மீட்டனர்.
 
மத்திய சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள நகரமான ஜங்ஜோ வெள்ள ஆபத்து அதிகம் உள்ள மஞ்சள் நதியின் கரையில் அமைந்துள்ளது. இங்கு 1.2 கோடி மக்கள் வசிக்கின்றனர். ஹெனான் மாகாணத்தில் சமீபத்திய மழை காரணமாக இதுவரை குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
ஆண்டுதோறும் கனமழையால் இங்கு வெள்ளம் உண்டாகும். இந்த ஆண்டு பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு பருவநிலை மாற்றமே காரணம் என்று சீன அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்