வன்முறை கட்டுக்குள் வராததால் ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் தொடங்கி அத்தியாவசிய பொருட்கள் வரை அனைத்திற்கும் பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது.
அதை தொடர்ந்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வரும் நிலையில், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் வன்முறை வெடித்தது. அதை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
ஆளும் கட்சி அரசியல் பிரமுகர்கள் வீடுகளை பொதுமக்கள் சூறையாடியும் தீ வைத்து அழித்தும் வருகின்றனர். சமீபத்தில் ராஜபக்சே குடும்பத்தின் வீடு தீ வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து சனத் நிஷாந்தா, குருநாகல் மேயர் மாளிகை, ராஜபக்சே பெற்றோர் கல்லறை, பிரசன்ன ரனதுங்கே வீடு என சுமார் 30க்கும் மேற்பட்ட வீடுகளை பொதுமக்கள் துவம்சம் செய்துள்ளனர்.
இதற்கிடையில் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன. இதனால் போராட்டகாரர்கள் மற்றும் பொது மக்கள் ராஜபக்சே பதுங்கியிருப்பதாக கூறப்படும் திரிகோணமலை கடற்படை தளத்தை சுற்றிவளைத்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதும் வன்முறை கட்டுக்குள் வராததால் ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆம், அமைதியை சீர்குலைப்பவர்களை உடனடியாக கைது செய்யவும், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ளவும் ராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.