ரஷ்யாவின் ஏரோபுளோட் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றிற்கு, நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு ரத்து செய்யப்பட்டதையடுத்து, விமானம் ரஷ்யா புறப்பட்டது.
இலங்கை கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபரினால் இன்று (06) தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை அடுத்து, நீதவான் ஹர்ஷ சேதுங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அயர்லாந்து நாட்டிற்கு சொந்தமான சேலேஸ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடட் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றின் விசாரணைகளின் போது, ரஷ்யாவின் ஏரோபுளோட் விமான சேவை நிறுவன விமானமொன்றை நாட்டை விட்டு வெளியேற, கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் கடந்த 2ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த தடையுத்தரவை சவாலுக்கு உட்படுத்தி, சட்ட மாஅதிபர் திணைக் களத்தினால் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறான பின்னணியிலேயே, விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை ரத்து செய்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
இதன்படி, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏரோபுளோட் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், இன்று மாலை 6 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ரஷ்யா நோக்கி பயணித்திருந்தது.