இலங்கை: துமிந்த சில்வா பொதுமன்னிப்பை நீதிமன்றம் இடைநிறுத்தியது
புதன், 1 ஜூன் 2022 (00:14 IST)
மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு, ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்துமாறு உயர்நீதிமன்றம் இன்று (31ம் தேதி) உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கையில் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது, கொழும்பு புறநகர் பகுதியான கொலன்னாவை - கொட்டிகாவத்தை பகுதியில், இரு குழுக்களுக்கு இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது.
அதில், இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகராகவும் இருந்த பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார்.
அப்போதைய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா காயமடைந்திருந்தார். பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் படுகொலைக்கு துமிந்த சில்வாவே காரணம் என்கிற குற்றச்சாட்டில், அவர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. அவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2021ம் ஆண்டு ஜுன் மாதம் 24ம் தேதி, பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்திருந்தார்.
ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி, பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருணிகா பிரேமசந்திர, பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மனைவி சுமனா பிரேமசந்திர மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான ஜனாதிபதி சட்டத்தரணி கசாலி ஹசைன் ஆகியோர் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்தி இன்று உத்தரவை பிறப்பித்துள்ளது.