இலங்கையில் இருந்து ஹஜ் பயணிகள் செல்லவில்லை - பொருளாதார நெருக்கடியால் அறிவிப்பு

வெள்ளி, 3 ஜூன் 2022 (00:17 IST)
இலங்கையில் இருந்து செளதி அரேபியாவிற்கு இந்த ஆண்டு ஹஜ் யாத்திரிகர்கள் செல்ல மாட்டார்கள் என்று இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
இலங்கையிலிருந்து 1, 585 பேருக்கு ஹஜ் யாத்திரைக்கு செளதி அரேபியா அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், 'தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் தங்கள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு இலங்கையிலிருந்து செளதிக்கு ஹஜ் கடமைக்காக யாத்திரிகர்களை அழைத்துச் செல்வதில்லை.' என, அகில இலங்கை ஹஜ் முகவர் சங்கம், ஹஜ் பயண முகவர் சங்கம் ஆகியன அறிவித்துள்ளன.
 
இதை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கும் கடந்த 31ஆம் தேதி, அறிவித்ததாக திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், 'ஹஜ் கடமைக்காக இலங்கைக்கு ஒதுக்கீடுகளை வழங்கியமைக்காக செளதி அதிகாரிகளுக்கு நன்றி. இலங்கையிலிருந்து யாத்திரிகர்கள் ஹஜ் கடமைக்கு செல்லாமையினால் செளதி அதிகாரிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்காக வருத்தத்தினையும் தெரிவித்துக் கொள்வதாக.'
 
இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாகவும் கடந்த 2020, 2021ஆம் ஆண்டுகளிலும், இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரிகர்கள் செல்லவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்