ரஷியாவுக்கு தற்போது விசா இல்லாமல் சீனா மற்றும் ஈரான் நாட்டினர் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த ரஷ்யா முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், விசா இல்லாத சுற்றுலா பரிமாற்றங்களை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் குறித்து இந்தியா மற்றும் ரஷ்யா நாட்டின் அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து, இ-விசாக்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது விசாக்கள் நான்கு நாட்களுக்குள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், ரஷ்யாவில் நுழைவதற்கும் தங்குவதற்கும் அந்நாட்டின் தூதரகத்தில் இந்தியர்கள் விசா பெறும் நடைமுறை மிகவும் நீண்டதாக இருப்பதால், அந்த முறையை ரத்து செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவுக்கு இந்தியர்கள் வணிகம் மற்றும் தொழில் நோக்கத்திற்காக அதிக அளவில் பயணம் செய்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 60 ஆயிரம் பேர் ரஷ்யாவுக்கு பயணித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், விசா இல்லாமல் ரஷ்யாவுக்குள் இந்தியர்களை அனுமதிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதோடு, அடுத்த ஆண்டு முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யாவுக்கு பயணம் செய்ய அனுமதிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.