அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவி ஏற்றதிலிருந்து, உலக நாடுகளுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, உலக நாடுகளுக்கு அவர் அதிக வரி விதித்து வருவது, வர்த்தக போரை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், சீனாவுக்கு அதிகபட்சமாக 104 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால் சீனாவின் நிலைமை இக்கட்டாக உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவை எதிர்க்க மற்ற நாடுகளுடன் சீனா கைகோர்க்க விரும்புகிறது. அந்த வகையில், இந்தியாவுக்கும் சீனா அழைப்பு கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை உலக நாடுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், இதனால் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் இணைந்து இந்த சிரமங்களை சமாளிக்க வேண்டும் என்றும் சீனா அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து சீன தூதர் தனது எக்ஸ் பக்கத்தில், “உலகளவிலான வளர்ச்சியில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த ஒரு நாட்டிற்கும் அதிக வரி விதிப்பதால் வளர்ச்சி அடைய முடியாது. குறிப்பாக, தெற்கிலுள்ள நாடுகளின் வளர்ச்சிக்கான உரிமை பறிக்கப்படுகிறது. எனவே, இந்தியா மற்றும் சீனா இணைந்து, அமெரிக்காவின் வரி விதிப்புக்கு தீர்வு காண வேண்டும்,” என தெரிவித்துள்ளார். இதற்கு இந்தியா என்ன பதில் அளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.