கர்நாடக அரசின் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் உலக சாதனை பெறப்பட்டதாக கூறி, முதல்வர் சித்தராமையா சமூக ஊடகங்களில் வெளியிட்ட இரண்டு 'உலக சாதனைச் சான்றிதழ்கள்' போலி என கண்டறியப்பட்டதால், அப்பதிவு நீக்கப்பட்டது.
'லண்டன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' என்ற அந்த சான்றிதழை வழங்கிய அமைப்பு, கடந்த ஜூலை மாதமே கலைக்கப்பட்டுவிட்டது என்ற உண்மையை இணைய பயனர்கள் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினர். மேலும், சான்றிதழில் இலக்கண பிழைகள் இருந்ததும் அம்பலமானது. இது சித்தராமையாவுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
பாஜகவின் ஐ.டி. பிரிவுத் தலைவர் அமித் மாளவியா, இந்தச் சம்பவத்தை "காங்கிரசுக்கு மிகப்பெரிய சங்கடம்" என்று குறிப்பிட்டு, "யாரோ ஒருவர் காங்கிரஸை அப்பட்டமாக ஏமாற்றியுள்ளார். நிறுவனம் கலைக்கப்பட்ட பின்னரும், போலியாக சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன" என்று கடுமையாக விமர்சித்தார். பாஜக தலைவர் சி.டி. ரவியும், மலிவான விளம்பரத்திற்காக அரசு மோசடி செய்வதாக சாடினார்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, சான்றிதழ்கள் கேள்விக்குரியவை என்றாலும், சக்தி திட்டத்தின் கீழ் பெண்கள் 100 கோடிக்கும் அதிகமான இலவச பயணங்களை மேற்கொண்டுள்ளனர் என்ற அடிப்படை சாதனை உண்மையானது மற்றும் சரிபார்க்கக்கூடியது என்று விளக்கம் அளித்துள்ளார்.