சீனாவில் 72 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் வெயிலில் சூடேறிய கல்லில் வெறும் 10 வினாடிகள் அமர்ந்ததால், அவரது பின்பக்கத்தில் தோல் திசுக்கள் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம் ஏற்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், கடும் வெப்ப அலைகளின்போது உலோகம் மற்றும் கல் போன்ற பொருட்களின் ஆபத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
அந்த மூதாட்டி தனது தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, சோர்வடைந்து ஒரு கல்லின் மீது ஓய்வெடுக்க உட்கார முடிவு செய்தார். ஆனால், கல்லில் அமர்ந்த பத்தே வினாடிகளில் அவருக்கு தாங்க முடியாத சூடு ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமாக, கால் பிரச்சனை காரணமாக அவரால் உடனடியாக எழுந்து நிற்க முடியவில்லை. இதனால் சில வினாடிகள் அவர் அந்த கல்லிலேயே உட்கார்ந்திருக்க நேரிட்டது.
இந்த சில வினாடிகளிலேயே, அவரது பின்பக்கத்தில் உள்ள தோல் திசுக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவரது தோல் திசுக்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த இறந்த திசுக்களை அகற்ற அறுவை சிகிச்சை செய்து, தோல் ஒட்டுதல் சிகிச்சைதான் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம், வெப்ப அலைகளின்போது உலோகம் மற்றும் கல் போன்ற பொருட்கள் ஆபத்தான அளவுக்கு வெப்பமடையலாம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இது முதியோர் மற்றும் சிறு குழந்தைகள் போன்ற பாதிக்கப்படக்கூடியவர்களுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை இது மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.