வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் வன்முறையாக மாறி பெரும் பதட்ட நிலையை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று வங்கதேச அரசு அறிவித்ததை அடுத்து இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த போராட்டம் தற்போது பெரும் கலவரம் வெடித்துள்ளது என்பதும் போராட்டக்காரர்கள் பல இடங்களில் தீ வைப்பது தொடர்ந்து கொண்டே இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக டாக்காவில் உள்ள சிறைச்சாலைக்கு தீ வைத்ததில் 800 கைதிகள் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கலவரக்காரர்களை கண்டதும் சுட வங்கதேச அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும் கலவரத்தை கட்டுப்படுத்த வங்கதேச ராணுவம் களமிறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கலவரத்தில் இதுவரை 103 பேர் பலியானதாகவும் ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.