வங்காளதேசத்தில் ஒரே நாளில் 14 இந்து கோவில்களை தாக்கி சிலைகளை உடைத்து மர்ம கும்பல் செய்த அட்டகாசம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில காலமாக வெளிநாடுகளில் இந்து மத கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்து கோவில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து வங்காளதேசத்திலும் இந்து கோவில்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் வங்கதேசம் முழுவதும் 14 இந்து கோவில்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. கோவிலுக்குள் புகுந்த மர்ம கும்பல் அங்குள்ள சிலைகளையும் சேதப்படுத்தியுள்ளது. வெளியாகியுள்ள செய்திகளின்படி, தந்தலா பகுதியில் சிந்தூர்பிந்தி என்ற இடத்தில் 9 சாமி சிலைகளும், பாரியா யூனியனில் உள்ள கோவிலில் 4 சாமி சிலைகளும், ஷபாஜ்பூர் நாத்பாரா பகுதியில் 12 கோவில்களில் இருந்து 14 சாமி சிலைகளும் என மொத்தம் 27 சாமி சிலைகள் சூறையாடப்பட்டுள்ளன.
சாமி சிலைகளின் கை, கால்களை உடைத்து பல சிலைகளை குளத்திலும், சாலைகளிலும் வீசி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மர்ம நபர்கள் குறித்து வங்கதேச போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.