கச்சா எண்ணெய் வர்த்தகம் – இந்தியாவை மிரட்டும் ட்ரம்ப் அரசு!

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (13:27 IST)
வெனிசுலாவிடம் இருந்து பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய் வாங்க இருக்கும் இந்தியாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.

தென் அமெரிக்க நாடுகளில் அதிக எண்ணெய் வளம் மிகுந்த நாடாக வெனிசுலா இருந்து வருகிறது. ஆனால் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுராவுக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையில் மோதல் போக்கே நிலவி வருகிறது. இதனால் அமெரிக்க அரசு வெனிசுலாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்துள்ளது. வெனிசுலாவிடம் இருந்து இதுவரை அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கி வந்த அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததால் வெனிசுலா பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளது.

இந்த இன்னலை சமாளிக்க வெனிசுலா அரசு இந்தியாவிடம் ஈரானைப் போல பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய் விறபனை செய்யும் யோசனையை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியா ஈரானிடம் தான் வாங்கும் கச்சா எண்ணெய்க்கு சரிபாதிப் பொருட்களாகவும் சரிபாதி இந்திய ரூபாயாகவும் அளித்து வருகிறது. இதுபோன்ற பரிவர்த்தனைக்காக வெனிசுலா அரசு எண்ணெய் நிறுவனமான பிடிவிஎஸ்ஏ இந்தியா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஈரானைப்போல வெனிசுலாவிடமும் இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவின் அன்னிய செலாவணி உயர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாகும்.

ஆனால் இந்தத் திட்டத்திற்கு அமரிக்க அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ‘மதுரா அரசு, வெனிசுலா மக்களையும் அவர்களின் வளங்களையும் சுரண்டிக் கொள்ளையடுத்து வருகிறது. அந்நாட்டின் கச்சா எண்ணெயை எடுத்து விற்பனை செய்ய மதுரோ அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவருடன் சேர்ந்து அதற்குத் துணை நிற்கும் நாடுகளையும் நாங்கள் சும்மா விடமாட்டோம். தக்க பதிலடி தருவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஈரானுடனான இந்தியாவின் கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தின் போதும் அமெரிக்கா இதுபோன்ற மிரட்டல்களை விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்