ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிப்பதாக தொடர்ந்து காசா மீது குண்டுமழை பொழிந்து வரும் இஸ்ரேல் ராணுவம் 4 நாட்களில் 4 பள்ளிகளை அழித்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே போர் வெடித்த நிலையில் ஒரு வருடத்திற்கும் மேலாக போர் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிப்பதாக காசா மீது இஸ்ரேல் போர் தொடங்கிய நிலையில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 38 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனாலும் இஸ்ரேல் ஓயாமல் தொடர்ந்து காசா மீது குண்டுமழை பொழிந்து வருகிறது. போரில் காயமடைந்தோரும், உயிர் பிழைத்தவர்களும் காசாவில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக அந்த பள்ளிகளையும் விட்டு வைக்காமல் தாக்கி அழித்து வருகிறது இஸ்ரேல் ராணுவம்
காசாவின் அப்சான் பகுதியில் உள்ள அமெரிக்காவால் நடத்தப்படும் அல் அவ்டா பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று திடீர் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 29 பேர் பலியான நிலையில், படுகாயமடைந்தவர்கள் கான் யூனிஸ் நாசர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து விளக்கமளித்த இஸ்ரேல் ராணுவம், அந்த பள்ளிக்கு அருகே ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K