ஜெயலலிதாவின் வெற்றிக்கு விஜயகாந்தும், ராமதாஸுமே காரணம் : இளங்கோவன் காட்டம்

Webdunia
வெள்ளி, 20 மே 2016 (16:12 IST)
நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு, ஜெயலலிதா யாருக்கேனும் நன்றி கூற விரும்பினால், விஜயகாந்திற்கும், ராமதாஸுக்கும் மட்டுமே கூறவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், அதிமுக 134 தொகுதிளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க உள்ளது. 6வது முறையாக ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். 
 
இதுகுறித்து இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடந்த ஐந்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஏற்பட்டது. தமிழகத்தில் நடைபெற்று வந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்றுகிற வலிமை இக்கூட்டணிக்குத்தான் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவார்கள்.
 
ஆனால் அ.தி.மு.க., தி.மு.க. இரண்டையும் வீழ்த்தப்போவதாக கூறி, மக்கள் நலக்கூட்டணி, பா.ம.க. என பிரிந்து தேர்தல் களத்தில் போட்டியிட்டதன் விளைவாக இன்றைக்கு அ.தி.மு.க. வெற்றிப் பெற்றுள்ளது. 
 
திமுக-காங்கிரஸ் கூட்டணியை விட 3 சதவீத வாக்குகள் வாங்கி, அதிமுக வெற்றி பெற்றுள்ளது. எனவே, அ.தி.மு.க.வுக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைந்திருந்தால் அ.தி.மு.க. ஆட்சி நிச்சயம் அகற்றப்பட்டிருக்கும். இன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததற்கு முக்கிய காரணம் மக்கள் நலக் கூட்டணியும், பா.ம.க.வும்தான். தி.மு.க., அ.தி.மு.க.வை ஒருசேர வீழ்த்துகிற வலிமை இல்லை என்பதை நன்கு அறிந்த பிறகும் மூன்றாவது, நான்காவது அணி ஏன் அமைத்தார்கள் என்பதற்கு அவர்கள்தான் விளக்கம் சொல்ல வேண்டும்.
 
அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்கு யாருக்காவது ஜெயலலிதா நன்றி சொல்ல வேண்டுமென்று சொன்னால் முதலில் விஜயகாந்த், அடுத்து மருத்துவர் ராமதாஸ் ஆகியோருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். மக்கள் விரோத ஆட்சியை மீண்டும் அமர்த்திய பாவத்தை செய்ததற்காக மக்கள் நலக் கூட்டணியையும், பா.ம.க.வையும் பாடம் புகட்டுகிற வகையில் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள்.
 
அத்தோடு, அக்கட்சியின் முக்கிய தலைவர்களான விஜயகாந்த், தொல். திருமாவளவன் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தோல்விக்குப் பிறகாவது பாடம் கற்றுக் கொள்வார்கள் என நம்புகிறோம். 
 
ஜனநாயகத்தை பணநாயகம் வென்றிருக்கிறது. ஆளுங்கட்சிக்கு எதிராக இதுவரை தமிழக சட்டமன்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட வலிமையான எதிர்கட்சியை தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சார்பாக மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இக்கூட்டணியைச் சார்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்