சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த கங்குவா திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸானது. இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் இயக்கியுள்ளார். படத்தில் பாபி தியோல், திஷா பதானி, நட்டி நட்ராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
படம் நேற்று ரிலீஸாகி பெரும்பாலும் கலவையான விமர்சனங்களையேப் பெற்று வருகிறது. அதில் படம் பார்த்த எல்லா ரசிகர்களுமே சொல்லும் ஒரே விமர்சனமாக இருப்பது படத்தில் இருக்கும் இரைச்சல்தான். படத்தில் கதாபாத்திரங்கள் எல்லாம் ஹை டெசிபலில் கத்திக் கொண்டிருப்பதாகவும், அதைவிட அதிக சத்தத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை இருப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர். மேலும் படத்தின் கதை ரசிகர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமான ஒரு உள்ளிழுத்தலை நிகழ்த்தவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் 2000 கோடி ரூபாய் டார்கெட் வைக்கப்பட்டு ரிலீஸ ஆன கங்குவா படத்தின் முதல் நாள் கலெக்ஷன் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. தமிழகத்தில் இந்த படம் தோராயமாக 20 முதல் 22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளியாகி வரும் எதிர்மறை விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் வசூலில் மிகப்பெரிய சரிவு இருகும் என தெரிகிறது.