லைகா ஷங்கர் பிரச்சனை முடிந்தது.. தமிழகத்தில் ரிலீஸாகும் கேம்சேஞ்சர்!

vinoth
செவ்வாய், 7 ஜனவரி 2025 (09:00 IST)
ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு இந்திய சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் ராம்சரண். கேம்சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக உருவாகி வருகிறது. இதையடுத்து படம் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது. ஷங்கரின் அதே டெம்ப்ளேட் வகை கதையாகதான் இந்த படமும் இருக்கப் போகிறது என்ற பிம்பத்தைக் கொடுத்துள்ளது. ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு ராம்சரண் நடிக்கும் படம் என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் இந்தியன் 3 படத்தை முடித்துக் கொடுக்காமல் ஷங்கர் அடுத்த படத்தைத் தொடங்கக் கூடாது எனக் கூறி லைகா நிறுவனம் ராம் சரண் தேஜாவுக்கு நெருக்கடி கொடுத்தது. மேலும் அவர்களுக்குள் பண விஷயத்திலும் சில கருத்து வேறுபாடுகள் எழுந்தன. அதனால் கேம்சேஞ்சர் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்க லைகா நிறுவனம் சில முயற்சிகளை தயாரிப்பாளர் சங்கம் மூலமாக மேற்கொண்டது. ஆனால் இருதரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து தற்போது சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்த வந்த பின்னர் இந்தியன் 3 குறித்து பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம் என இருதரப்பும் ஒத்துக் கொண்ட நிலையில் ஜனவரி 10 ஆம் தேதி இந்த படம் தமிழகத்தில் ரிலீஸாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்