இப்படி ஒரு கதையை யாராவது கூறமாட்டார்களா? என்று நீண்ட காலம் காத்திருந்தேன்!

Webdunia
வெள்ளி, 24 ஜனவரி 2020 (11:10 IST)
மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. இவருடைய உதவி இயக்குநராக இருந்த தனா இப்படத்தை இயக்குகிறார். இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாநேற்று  சென்னை சார் முத்து வெங்கட சுப்பா ராவ் ஹாலில் பிரமாண்டமாக நடைபெற்றது அப்போது பேசிய நடிகர், நடிகைகள் பற்றி இங்கே பார்க்கலாம் 
 
நடிகை மடோனோ செபாஸ்டியன் பேசும்போது,
 
என் கைப்பேசியில் தயாரிப்பு நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ், இயக்குநர் தனா என்ற குறுஞ்செய்தியைப் படித்ததும் ஒரு நல்ல படத்தில் நடிக்கப் போகிறோம் என்ற நம்பிக்கை வந்தது. மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மேலும், ஒவ்வொருவருக்குமே சிறந்த படத்தில் நடிக்கிறோம் என்ற எண்ணத்தில் தான் நடித்திருக்கிறோம் என்றார்.
 
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது,
 
தனா இந்த கதையைக் கூறும்போது வித்தியாசமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் அண்ணன் தங்கை உறவு எப்படி இருக்கும் என்பதை அவர் கூறியதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டுமென்ற எனது கனவு இப்படம் மூலம் நனவாகியிருக்கிறது. ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திற்கு முன்பே இந்த படத்தில் ஒப்பந்தமாகிவிட்டேன். இரண்டு படங்களிலுமே தங்கை கதாபாத்திரம் தான். ஆனால், இரண்டு கதாபாத்திரங்களும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ‘ஈஸி’ பாடல் தான்.
 
ராதிகாவுடன் ஏற்கனவே ‘தர்மதுரை’ படத்தில் நடித்திருக்கிறேன். அவருடைய நடிப்பை மிகவும் ரசித்துப் பார்ப்பேன். இப்படத்தின் மூலம் இன்னும் நிறைய அனுபவங்கள் கிடைத்தது. ‘காக்கா முட்டை’ படத்தில் நான் நடிக்கும்போது எனக்கு வயது 22. இந்த சிறிய வயதில் யாரும் இதுபோன்ற முதிர்ச்சியான பாத்திரத்தில் நடிக்க முன்வரவில்லை. அதன்பிறகு தான் சிலர் அதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்கள். நான் எப்போதும், எனது கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதை மட்டும்தான் பார்ப்பேன் என்றார்.
 
இசையமைப்பாளர் சித்ஸ்ரீராம் பேசும்போது
 
இசையமைப்பாளராக இப்படம் எனக்கு முதல் படம். இயக்குனர் மணிரத்னம் மற்றும் தனா இருவரும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்திருக்கிறார்கள்.  1960களில் எனது தாத்தா இசையமைப்பாளராக இருந்திருக்கிறார். இயக்குனர் இதனுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இப்படத்தில் இடம் பெற்ற நான்கு பாடல்களையும் சிவா எழுதியிருக்கிறார். இப்படத்தின் வாய்ப்பை எனது அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்றார்.
 
நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது,
 
மணிரத்னத்தின் தயாரிப்பில் நடித்ததில் மகிழ்ச்சி. தனா என்னிடம் கதை கூறினார், கதை வித்தியாசமான குடும்ப கதையாக இருந்ததால் சம்மதித்தேன். பிறகுதான் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கிறது என்று தெரியும். எந்த படமாக இருந்தாலும் என்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கிறது என்று தான் பார்ப்பேன். இயக்குநரின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது.
 
எனது கதாபாத்திரம் தலைக்கனத்தோடு இருக்கிறானா? அல்லது தன்னம்பிக்கையோடு இருக்கிறானா? இறுதியில் அவன் எடுத்த முடிவில் வெற்றிபெறுகிறானா? என்பது படம் பார்க்கும்போது தெரியும். முடிவு அனைவருக்கும் திருப்தி கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும். ஒரு நடிகனாக அனைவரும் என்னை வித்தியாசமான கோணத்தில் பார்ப்பார்கள். கோயம்பேடு மார்க்கெட்டில் கூட்டத்தில் நேரடியாகத்தான் படப்பிடிப்பு நடத்தினோம். முதல் நாள் படப்பிடிப்பில் இயக்குநர் மணிரத்னம் வந்தார். அவரைப் பார்த்ததும் சிறிது பதட்டம் இருந்தது. பிறகு படம் முடிந்ததும் தான் அவரிடம் பேசினோம். ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் தங்களுடைய திறமையை நிரூபிக்கும் வகையில் நடித்தோம்.
 
ராதிகா எனக்கு மிகவும் பிடித்த நடிகை. அவரை அக்கா என்று தான் அழைப்பேன். அவர் நடிக்கும்போது இயல்பாக இருக்கும். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சுலபமாக நடித்துவிடுவார் என்றார்.
 
ராதிகா சரத்குமார் பேசும்போது,
 
சரத்குமார் தான் முதலில் கதை கேட்டார். பிறகு எனக்கும் பிடித்திருந்தது. இப்படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் நடித்ததில் மகிழ்ச்சி. நான் சித்ஸ்ரீராமின் ரசிகை. அவருடைய நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், நேரமின்மை காரணமாக போக இயலவில்லை. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சோனு ஆகியோருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி என்றார்.
 
சரத்குமார் பேசும்போது,
 
தனா கதைகூறியதும் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் இயல்பான கதையாக தோன்றியது. இப்படம் அன்றாட மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக கூறும் குடும்பத்துடன் பார்த்து மகிழும் படமாக இருக்கும். இதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா? என்று நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் நடிப்பது மகிழ்ச்சி என்றார்.
 
இயக்குநர் தனா பேசும்போது,
 
வாழ்க்கையில் இதுபோன்ற வாய்ப்பு ஒரு சிலருக்குத்தான் கிடைக்கும். இந்த வாய்ப்பால் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்றார். விழாவின் இறுதியில் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது. இந்த ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறதது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்