காலா படத்திற்கு குறைந்த வசூல் - காரணம் இதுதானா?

Webdunia
வெள்ளி, 8 ஜூன் 2018 (12:49 IST)
ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் வசூல் படக்குழு எதிர்பார்த்தபடி இல்லை என செய்திகள் வெளிவந்துள்ளது.

 
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் நேற்று வெளியானது. ஏற்கனவே முன்பதிவு மந்தமாக இருந்த நிலையில் பல மாவட்டங்களில் தியேட்டர்கள் காலியாக இருக்கிறது என செய்திகள் வெளியாகி வருகிறது.
 
வழக்கமாக ரஜினி படம் வெளியாகிறது எனில், முன்பதிவு தொடங்கியவுடனேயே ஒரு வாரத்திற்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விடும். ஆனால், சென்னையில் சத்யம் உள்ளிட்ட முக்கிய தியேட்டர்களிலேயே வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் டிக்கெட் இன்னும் புக் ஆகாமல் காலியாக கிடக்கிறது. மிக சொற்பமான டிக்கெட்டுகள் மட்டுமே புக் செய்யப்பட்டிருக்கிறதாம். மற்ற மாவட்டங்களிலும் இதே நிலைதான்.
 
குறிப்பாக ரஜினி படம் வெளியானால் முதல் நாள் வசூலே பல கோடிகளை தொட்டு விடும். ஆனால், அந்த மேஜிக் ‘காலா’வில் நடக்கவில்லை எனத்தெரிகிறது.  இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.

 
முதலில் தூத்துக்குடி விவகாரமே இதில் பிரதானமாக இருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதுதான் பிரச்சனை, போலீசாரை தாக்கியதும், கலெக்டர் அலுவலகத்தில் தீ வைத்ததும் அவர்கள்தான் என ரஜினி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
மேலும், போராட்டம் போராட்டம் என தொடர்ந்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என அவர் கூறியது கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. படத்தில் போராட்டமே பெரியது எனக்கூறும் ரஜினி நிஜத்தில் அதற்கு எதிராகவே பேசுகிறார். போராட்டம் நடத்திய தமிழர்களை ரஜினி சமூக விரோதிகள் எனக் கூறுகிறார் என குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத்தொடர்ந்து பலரும் ‘நான் காலாவை பார்க்க மாட்டேன்’ என சமூக வலைத்தளங்களில் கூறிவந்தனர். அவர்களில் பெரும்பாலனோர் காலாவை புறக்கணித்திருக்கிறார்கள்.

அதேபோல், கர்நாடகாவில் காலா படம் வெளியிடுவதை அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்பினர் களம் இறங்கிய போது, நான் தவறு எதுவும் செய்யவில்லை. படத்தை வெளியிட அனுமதியுங்கள் என ரஜினிகாந்த் சாந்தமாக வேண்டுகோள் விடுத்தார். தமிழர்களை சமூக விரோதிகள் என ஆவேசமாக பேசிய ரஜினி, கன்னடர்களிடம் இப்படி பம்முகிறாரே என பலரும் முகம் சுளித்தனர். இது சமூக வலைத்தளங்களிலும் எதிரொலித்தது. காலா படத்தை பார்க்க பலரும் ஆர்வம் காட்டததற்கு இதுவும் முக்கிய காரணம்..

 
அடுத்து, இதற்கு முன்பு ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கிய கபாலி படம் பெரும்பாலான ரஜினி ரசிகர்களை திருப்தி செய்யவில்லை. காலா படமும் அதே ஸ்டைலில்தான் இருக்கும் என பலரும் முன்னரே முடிவு செய்துவிட்டனர். அதாவது, ரஞ்சித் தனது அரசியலை ரஜினியை வைத்து சொல்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. 
 
அடுத்து, முக்கிய காரணம் ஜூன் மாதத்தில் குடும்ப தலைவர்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருப்பது தனது குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளுக்கான செலவுகள். அதையே சமாளிக்க முடியாமல் திணறும் குடும்ப தலைவர்களுக்கு காலா படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்பது அவசியமில்லாமல் போயிருக்கலாம்.
 
மேலும், இது ரமலான் நோன்பு காலம் என்பதால் கணிசமான இஸ்லாமிய ரசிகர்கள் தியேட்டருக்கு வர மாட்டார்கள் என பல காரணங்கள் கூறப்படுகிறது.
 
ரஜினியின் தீவிர ரசிகர்கள் மட்டுமே முதல் நாள் படத்தை பார்த்துள்ளனர். ஆனால், நேற்றே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் ரசிகர் மன்ற அதிக விலை டிக்கெட் இல்லாமல், டிக்கெட் கவுண்டர்களிலேயே சுலபமாக டிக்கெட் கிடைத்தது.
 
எப்படி இருந்தாலும் முதல் இரண்டு நாளில் ஒரு படத்தின் மொத்த வசூலைப்பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாது. இந்த வார இறுதியில் தியேட்டர்களில் டிக்கெட்டுகள் எப்படி விற்பனை ஆகிறது மற்றும் அடுத்த வார தொடக்கம் எப்படி அமையப்போகிறது என்பதில்தான் காலா படத்தின் வசூல் அடங்கியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்