முதல்வர் வேடத்தில் ரஜினி! சூப்பர் ஸ்டாரின் புதிய படம் நாற்காலி?

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (11:14 IST)
அரசியலில் இறங்கும் ஆர்வத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த், புதிதாக நடிக்க உள்ள படத்தின் கதை அரசியல் கதையாம் . இந்த படத்துக்கு நாற்காலி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 
2.0 படத்துக்கு பிறகு பேட்ட படத்தில் ரஜினி காந்த் நடித்தார். இந்த படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாகிறது.

தற்போது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ள ரஜினி அங்கு ஓய்வெடுத்து வருகிறார். இன்னும் ஓரிரு தினங்களில் சென்னை திரும்புகிறார். அதன் பிறகு முழு நேர அரசியலில் இறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக அவரது அண்ணன் சத்யநாராயணா அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பொங்கலுக்கு பின்னர் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவார் என தெரிவித்தார். ஆனால் ரஜினி, ஏ ஆர் முருகதாஸ் சொன்ன கதை பிடித்துப் போனதால் அந்த படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்தப் படத்துக்கு கதையை முருகதாஸ் சில நாட்களாக மெருகேற்றி வந்தார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர். பொதுவாக முருகதாஸ் படம் என்றாலே அரசியல் , விவசாயம் , ஊழல் உள்பட நிகழ்கால பிரச்சனைகளை கையிலெடுத்து அதை வெற்றிகரமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பார். 

அந்தவகையில் ரஜினி நடிக்க உள்ள படம் அரசியல் படம் என தகவல் வெளியாகியுள்ளது. சாதாரண மனிதர் அரசியலுக்கு வந்து படிப்படியாக வளர்ந்து முதல்வர் நாற்காலியை பிடிப்பதுபோல் திரைக்கதையை முருகதாஸ் அமைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 
 
எனவே இந்த படத்துக்கு நாற்காலி என்று தலைப்பு வைக்க ஆலோசனை நடந்து வருகிறது. இதேபோல் வேறு பெயர்களையும் பரிசீலிக்க முருகதாஸ் ஆலோசித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்