திருவனந்தபுரம் மியூசியத்தில் தத்ரூபமாக அமைக்கப்பட்ட ரஜினியின் மெழுகு சிலையால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில், கிழக்கு கோட்டை என்னும் பகுதியில் புதிதாக மெழுகு சிலை மியூசியம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தில் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோருக்கு மெழுகு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களை தொடர்ந்து, பிரபல நடிகர்களான மோகன் லால், சல்மான் கான், நடிகை கரீனாகபூர், கிரிக்கெட் வீரர் சச்சின் உட்பட 27 பிரபலங்களின் மெழுகு சிலைகள் அந்த மியூசியத்தில் இடம்பெற்றுள்ளன.
அந்த சிலைகளெல்லாம் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. அந்த சிலையை காண்போருக்கு. அந்த பிரபலங்களின் உண்மையான தோற்றத்தையே காண்பது போல் உள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். முக்கியமாக கபாலி திரைப்படத்தின் தோற்றத்தில் உள்ள நடிகர் ரஜினியின் சிலை, மலையாள நடிகர் மோகன் லால் சிலை, ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சிலைகளுக்கு முன்பு அனைவரும் செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர்.
இந்த மெழுகு சிலை மியூசியத்தை கேரளாவின், கொச்சி பகுதியைச் சேர்ந்த சுனில் கண்டலூர் என்பவர் உருவாக்கி உள்ளார். மெழுகு சிலை கலைஞரான இவர் ஒரு சிலையை வடிவமைக்க ஒரு மாதம் அவகாசம் எடுத்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனை குறித்து சுனில், சிலை செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்திக்க அனுமதி கிடைத்தால் சிலை உயிரோட்டமாக அமையும் என்றும், பிரதமர் மோடி உட்பட சிலரை சிலை செய்வதற்காக நேரில் சந்தித்த தருணத்தை தன்னால் மறக்கமுடியாது எனவும் உற்சாகம் பொங்க கூறுகிறார்.
மேலும் சுனில், அடுத்தக்கட்ட பாய்ச்சலாக, ரவிவர்மாவின் ஓவியங்கள் அடிப்படையில் 50 சிலைகளை உருவாக்க உள்ளதாக திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.