விமர்சனங்களை புறக்கணிப்பது எங்கள் நோக்கம் இல்லை என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திரைப்படங்களின் விமர்சனங்களை பேஸ்புக், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட திரைப்படம் வெளியான மூன்று நாட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற, நீதிமன்றத்தில் நமது சங்கத்தின் கோரிக்கை, சமீப காலங்களில் சில ஊடகங்கள் தனிப்பட்ட வன்மத்துடன், சில திரைப்படங்களுக்கு எதிராக விமர்சனம் செய்து வருவதையும், தனி மனித தாக்குதல் செய்து வருவதையும் தடுக்கவே தவிர, ஒட்டுமொத்தமாக அனைத்து ஊடங்கங்களுக்கும் எதிரானது அல்ல.
அப்படிப்பட்ட சிலரை மட்டுமே தடுக்க முடியாத காரணத்தினால் தான், ஒட்டுமொத்தமாக மூன்று நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை கேட்டு நீதிமன்றம் சென்று இருக்கிறோம். இதே காரணத்திற்காகத்தான், மலையாள திரைப்பட உலகமும் நீதிமன்றம் சென்றுள்ளது. பாரம்பரியமான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இணையதளங்களில் எப்போதும் திரைப்படங்களை, திரைப்படம் சம்பந்தப்பட்டவர்களை தரம் தாழ்த்தி விமர்சிப்பது இல்லை. சில ஊடகங்கள்/ஊடகவியலாளர்கள் தவிர, மீதம் அனைத்து ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் திரைப்பட உலகிற்கு ஆதரவாக இருக்கிறார்கள், பல திரைப்படங்களின் வெற்றிகளுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் பல முறை திரைப்பட நிகழ்வுகளில் சொல்லி இருக்கிறோம்.
மீண்டும் இங்கு சொல்ல விரும்புகிறோம். நமது சங்கத்தின் இந்த முயற்சி அனைத்து ஊடங்களுக்கும் எதிரானது அல்ல. ஒட்டுமொத்தமாக அனைவரையும் புறக்கணிப்பது நமது சங்கத்தின் நோக்கம் இல்லை.
அதே போல, அப்படிப்பட்ட நடுநிலையான ஊடங்கங்களின் ஆதரவை எதிர்பார்த்திருக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் எதிரானது அல்ல நமது சங்கத்தின் இந்த செயல்பாடு. எனவே வழக்கு மன்றத்தில் இது குறித்து ஒரு சரியான வழிமுறை (Guidelines) வரும் வரை, தயாரிப்பாளர்கள் அந்த திரைப்படத்திற்கான PRO-வுக்கு பரிந்துரைக்கும், டெலிவிஷன், பத்திரிக்கை, யூ-டியூப் (YouTube) சேனல்கள், வலைத்தளங்கள், சோசியல் மீடியா Influencer-கள், Press Show- வுக்கு வந்து, திரைப்படங்களை பார்த்து விமர்சனங்களை வெளியிடுவதில், எந்த எதிர்ப்பும் நமது சங்கத்தில் இருந்து இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம். எனவே திரைப்பட தயாரிப்பாளரின் அனுமதியோடு Press மேலே Show-வுக்கு குறிப்பிட்டவர்கள் வந்து திரைப்படங்களை பார்த்து விமர்சனம் செய்யலாம். விரைவில் சட்டரீதியாக, நீதிமன்றத்தில் இதற்கு ஒரு தீர்வும் எட்டப்படும் என்று நம்புகிறோம்.
தயாரிப்பாளர்களின் நலன் காக்கவே நமது சங்கம் இந்த முயற்சியை எடுத்துள்ளது. எனவே, இந்த விளக்கத்தையும், செயல்முறையையும், தயாரிப்பாளர்கள் சரியான முறையில் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்.