தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை , குணச்சித்திரம் மற்றும் கதாநாயகன் என பல வேடங்களில் நடித்து வருபவர் கருணாஸ். இடையில் அரசியலில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார். இவருக்கு கென் என்ற மகனும் டயானா என்ற மகளும் உள்ளனர். கென் அசுரன் உள்ளிட்ட படங்களின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ள நிலையில் சமீபத்தில் கருணாஸின் மகள் டயானாவுக்கு திருமணம் நடந்துள்ளது.
சினிமாவில் இருந்து சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு, அரசியலில் செயல்பட்ட அவர் மீண்டும் சினிமாவுக்கே திரும்பி படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான போகுமிடம் தூரமில்லை படம் பரவலானக் கவனத்தைப் பெற்றது.
சமீபத்தில் அவர் அளித்த ஒரு பாட்காஸ்ட் நேர்காணலில் “பாலா அண்ணன் இயக்கிய பிதாமகன் படத்தில் சூர்யா நடித்த சக்திவேல் கதாபாத்திரத்தில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அதை நான் இழந்துவிட்டேன். ஏன் என்றால் அப்போது எனக்கு சினிமா தெரியவில்லை. அது மட்டும் நடந்திருந்தால் நான்தான் இப்போது தமிழ் சினிமாவின் நானா படேகர்” எனக் கூறியுள்ளார்.