இயக்குனர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை மற்றும் குற்றமே தண்டனை ஆகிய படங்கள் மிகப்பெரிய அங்கிகாரத்தை அவருக்கு பெற்றுத் தந்தன. ஆண்டவன் கட்டளை படத்துக்குப் பிறகு 3 ஆண்டு இடைவெளியில் கடைசி விவசாயி படத்தை இயக்கி இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்டார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகிய இருவரும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளனர். முக்கியமான கதாபாத்திரத்தில் முருகேசன் என்ற வயதான தாத்தா நடித்திருந்தார். இந்த படம் பல விருதுகளை வென்றது. ஆனால் திரையரங்கில் இந்த படம் எதிர்பார்த்த அங்கீகாரத்தைப் பெறவில்லை.
இந்நிலையில் மூன்றாவது முறையாக இருவரும் ஒரு படைப்புக்காக இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்போது அந்த படம் குறித்து பேசியுள்ள விஜய் சேதுபதி “மூன்றாவது முறையாக மணிகண்டனுடன் இணைந்து ஒரு படத்துக்காக இணைவது மகிழ்ச்சி. ஆனால் அது ஒரு படமாக இல்லாமல், ஒரு வெப் சீரிஸாக இருக்கும்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்போது இந்த தொடர் குறித்து அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம். இந்த தொடர் தமிழில் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் வெப் தொடராக உருவாகி வருகிறது. இந்த தொடருக்கு அல்போன்ஸ் புத்ரனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைக்க உள்ளார்.