சில மாதங்களுக்கு முன்னர் விஷால் நடிப்பில் ரவி அரசு இயக்கத்தில் உருவாகும் மகுடம் படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து இயக்குனர் ரவி அரசு நீக்கப்பட்டு அவருக்குப் பதில் விஷாலே படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இது சம்மந்தமான தெளிவான விளக்கம் எதுவும் விஷால் தரப்பில் இருந்து வெளியாகவில்லை. இயக்குனரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஷால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.  இந்நிலையில் தன் தரப்பு விளக்கத்தை சொல்ல இயக்குனர் ரவி அரசு விஷால் இல்லத்துக்கு சென்றதாகவும், ஆனால் பலமணி நேரம் ஆகியும் விஷால் அவரை சந்திக்கவே இல்லை என்றும் வலைப்பேச்சு சேனலில் பத்திரிக்கையாளர் ஜெ பிஸ்மி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முறையான விளக்கம் அளிக்காமல் இயக்குனரை நீக்கியதால் கோபமடைந்த இயக்குனர் சங்கம் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பான FEFSI மூலமாக இந்த படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் ரவி அரசிடம் இருந்து தடையில்லாச சான்றிதழ் வாங்காமல் படப்பிடிப்பைத் தொடர முடியாத அளவுக்கு தற்போது இயக்குனர் சங்கம் மகுடம் படத்தை முடக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.