கடந்த சில ஆண்டுகளாக பல சறுக்கல்களை சந்தித்த விஷால் மத கஜ ராஜா படத்தின் வெற்றியின் மூலம் கம்பேக் கொடுத்தார். ஆனால் சமீபகாலமாக அவர் சில உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சைப் பெற்று குணமானார். இதையடுத்து சில மாதங்களுக்கு முன்னர் அவர் ரவி அரசு இயக்கத்தில் மகுடம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து இயக்குனர் ரவி அரசு நீக்கப்பட்டு அவருக்குப் பதில் விஷாலே படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இது சம்மந்தமான தெளிவான விளக்கம் எதுவும் விஷால் தரப்பில் இருந்து வெளியாகவில்லை. இயக்குனரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஷால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தன் தரப்பு விளக்கத்தை சொல்ல இயக்குனர் ரவி அரசு விஷால் இல்லத்துக்கு சென்றதாகவும், ஆனால் பலமணி நேரம் ஆகியும் விஷால் அவரை சந்திக்கவே இல்லை என்றும் வலைப்பேச்சு சேனலில் பத்திரிக்கையாளர் ஜெ பிஸ்மி தெரிவித்துள்ளார்.