புதுக்கோட்டை சிறுமி கொலை; குரல் கொடுக்கும் சினிமா பிரபலங்கள் - #JusticeforJayapriya

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (09:40 IST)
புதுக்கோட்டையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமிக்கு நீதி கேட்டு திரை பிரபலங்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

புதுக்கோட்டை அருகே ஏம்பல் கிராமத்தில் காணாமல் போன சிறுமி வண்ணாங்குளம் ஊரணியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இதை செய்த குற்றவாளியும் பிடிபட்டுள்ளான்.

சிறுமியின் கோர மரணம் குறித்து முதல்வர் வருத்தம் தெரிவித்துள்ளதுடன், சிறுமியின் குடும்பத்திற்கு உதவி தொகையும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் என குரல்கள் எழ தொடங்கியுள்ளன.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள வரலட்சுமி சரத்குமார் “என்ன கொடுமை இது? மீண்டும் ஒரு சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். இந்த கொடுமைகளை தாங்காமல்தான் கடவுள் கொரோனா மூலம் மனிதனுக்கு பதில் சொல்கிறார் போல.. நாம் வாழவே தகுதியில்லாதவர்கள்” என்று கூறியுள்ளார்.

சாய்பல்லவி “மாநிலம் முழுவதும் நடக்கும் ஏகப்பட்ட பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக இந்த ஹேஷ்டேகை பயன்படுத்துவோம்” என்று கூறியுள்ளார்.

ராதிகா சரத்குமார் “இந்த செய்தியை படித்த போது எனது இதயமே உடைந்துவிட்டது. இதை எழுத கூட முடியாத அளவிற்கு கண்கள் கலங்குகின்றன. குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித் “இனி இன்னொரு குழந்தை பாதிக்காமல் இருக்க தக்க பாதுகாப்பை ஏற்படுத்த நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம்!” என்று கூறியுள்ளார்.

மேலும் பல சினிமா பிரபலங்களும் சிறுமியின் இறப்புக்கு அஞ்சலி செலுத்து வருவதுடன், உரிய நீதி கிடைக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்