நடிகர் சங்கம் சார்பாக அளிக்கப்பட்ட புகாரில் மருத்துவர் காந்தராஜ் மீது வழக்குப்பதிவு!

vinoth
திங்கள், 16 செப்டம்பர் 2024 (09:43 IST)
மலையாள திரையுலகில் வாய்ப்பு தேடி வரும் பெண்களை நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் பாலியல் ரீதியாகப் பயன்படுத்துவதாக (casting couch) எழுந்த சர்ச்சையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமாக ஆய்வு செய்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் இந்த சர்ச்சை விவகாரம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேசிய மருத்துவரும்,சில படங்களில் நடித்துள்ளவருமான காந்தராஜ் பெண் நடிகர்கள் குறித்து ஆபாசமாகப் பேசியதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதில் பல நடிகைகள் இதுபோன்ற அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு ஒத்துக்கொண்டு இப்போது காலம் போன காலத்தில் வந்து புகாரளிக்கிறார்கள் என்றெல்லாம் அவர் பேசியிருந்தார். இதற்கு வலுவானக் கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது அவர் மீது நடிகர் சங்கம் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க விசாகா கமிட்டி தலைவர் ரோகிணி, காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னைக் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்நிலையில் இப்போது அந்த புகாரின் பேரில் மருத்துவர் காந்தராஜ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆபாசமாக பேசுதல், பெண்ணின் மாண்பை குலைத்தல், தனிநபரை அவமதித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்