உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் அறிமுகம் தேவையில்லாத நபர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
ஆனால் அவரைச் சுற்றி அவ்வப்போது சர்ச்சைகளும் எழாமல் இல்லை. அதற்கு முக்கியக் காரணம் தன்னுடைய பாடல்களின் ராயல்டி சம்மந்தமாக அவர் எடுத்துள்ள நிலைப்பாடுதான். தன்னுடைய பாடல்களின் முழு காப்புரிமையும் தன்னிடம்தான் உள்ளது என அவர் சொல்ல ஆனால் தயாரிப்பாளர்கள் மற்றும் இசை நிறுவனங்கள் காப்புரிமை தங்களிடம் இருப்பதாக சொல்கின்றன. இது சம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் பிரபல இயக்குனர் சி எஸ் அமுதன் தன்னுடைய பட ப்ரமோஷன் பட நிகழ்ச்சிக்காக இளையராஜாவின் பாடல் ஒன்றை பயன்படுத்த அவரிடம் அனுமதி கேட்டபோது “பணம் எதுவும் வேண்டாம். பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொன்னார்” எனக் கூறியுள்ளார். மேலும் “அவர் எதிர்பார்ப்பது பணம் அல்ல. அங்கீகாரம்தான். அதைக் கூட கொடுக்க முடியாவிட்டால் எதற்காக அவர் பாடல்களை பயன்படுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.