விருதுகள் இன்று குடிசைத் தொழில் போல் ஆகி விட்டன- கவிஞர் சேரன் பேச்சு!

J.Durai
வெள்ளி, 25 அக்டோபர் 2024 (10:04 IST)
தமிழ் இலக்கியத்திற்கான விருதுகளில் புகழ் பெற்றது கனடாவில் வழங்கப்படும் 'தமிழ் இலக்கியத் தோட்டம்' விருதாகும்.
 
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியானது  24- ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 
கல்வியாளர்கள் , எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியோரின் கூட்டுறவில் இயங்கி வருகிறது இந்த அமைப்பு
 
உலகமெங்கும் பரந்து இருக்கும் தமிழை வளர்ப்பதற்காக, தொடங்கப்பட்ட ஓர் அறக்கட்டளையாகும்.கனடா அரசால் பதிவு செய்யப்பட்ட ஒரே தமிழ் இலக்கிய அறக்கட்டளை இதுவாகும்.
 
அரிய தமிழ் நூல்களை மீண்டும் பதிப்பித்தல், தமிழ் ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பை ஊக்குவித்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்குப் புலமைப் பரிசில் வழங்குதல், தமிழ்ப் பயிற்சிப் பட்டறைகள் ஒழுங்கு செய்தல், கனடா நாட்டு  நூலகங்களுக்கு இலவசமாகத் தமிழ் நூல்களை அளித்தல்  போன்ற சேவைகள் இதன் முக்கிய முன்னெடுப்புகளாகும்.
 
அமைப்பாகத் தோன்றி இயக்கமாக வளர்ந்திருக்கும் இந்த 'கனடா இலக்கியத் தோட்டம்'  மூலம் ஆண்டு தோறும் உலகத்தின் மேன்மையான தமிழ் இலக்கிய சேவையாளர் ஒருவருக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது வழங்கி கௌரவித்து வருகிறார்கள். 
 
இயல் விருது என்ற பெயரில் இந்த விருது வழங்கப்படும் .இது பாராட்டுக் கேடயத்துடன் 2500 டாலர்கள் பணப்பரிசும் கொண்டது.2023-க்கான விருது ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். -க்கு வழங்கப்படுகிறது.அவரது வாழ்நாள் சாதனைக்காக இவ்விருது வழங்கப்பட்டு இருக்கிறது. ஓர் ஆய்வாளராக அவர் சிந்து சமவெளி நாகரிகம் பற்றிச் செய்திருக்கும்  ஆய்வு, வரலாற்று ஆய்வு நோக்கில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
 
புனைவு, அல்புனைவு, கவிதை, தமிழ்த் தகவல் தொழில்நுட்பம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள், பரிசுகள் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்கும் சிறந்த மாணவருக்கு ஆயிரம் டாலர் புலமைப் பரிசில்  என்கிற பெயரில் ஊக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
 
டொரண்டோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ் இலக்கியத் தோட்டம், தமிழ் அறிஞர்களின்  விரிவுரைகளுக்கும் ஏற்பாடு செய்கிறது. அத்துடன் மறக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள நாட்டுக் கூத்து போன்ற பாரம்பரியத் தொல் கலைகளை மீட்டுப் புத்தாக்கம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.
 
கனடா தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருதினை இதுவரை எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர் ,கவிஞர், மொழி ஆய்வாளர், கல்வியாளர்கள் என்று பலதரப்பட்டவர்கள் பெற்றுள்ளார்கள்.
 
அந்தப் பட்டியல், 2001-ல் சுந்தர ராமசாமி தொடங்கி மணிக்கொடி காலத்து கே. கணேஷ்,இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன், இ. பத்மநாப ஐயர்,ஜார்ஜ் எல். ஹார்ட், தாசீசியஸ்,லட்சுமி ஹோம் ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி,ஐராவதம் மகாதேவன்,எஸ் பொன்னுத்துரை,எஸ் ராமகிருஷ்ணன் நாஞ்சில்நாடன், டொமினிக் ஜீவா, தியோடர் பாஸ்கரன்,ஜெயமோகன் , இ.மயூரநாதன்,சுகுமாரன், வண்ணதாசன், இமையம், ஆ.இரா.வெங்கடாசலபதி,பாவண்ணன்,லெ.முருகபூபதி  என நீள்கிறது .
 
2024 அக்டோபர் 20-ல் இவ்விருது விழா டொரொண்டோ நகரில் நடைபெற்றது. விழாவை அமைப்பின் புரவலர்களில் ஒருவரான ஏ.ஜே.வி சந்திரகாந்தன் தொடங்கி வைத்தார். தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தலைவர் மேனுவல் ஜேசுதாசன் வரவேற்புரையாற்றினார். தமிழ் இலக்கியத் தோட்ட புரவலர்களில் ஒருவரும் ஹார்ட்வேர்ட்  பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை தொடக்கி வைத்தவருமான டாக்டர் ஜானகிராமன் சிற்றுரையாற்றினார்.
 
அதன் பிறகு விருதுகள் வழங்கப்படும் நிகழ்வுகள் அரங்கேறின.இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை ஆர் .பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் க்கு வழங்கப்பட்டது.படைப்புக்கான புனைவு விருதை ஏ.எம். றஷ்மி சற்றே பெரிய கதைகளின் புத்தகம் படைப்புக்காகவும்,
அல்புனைவுக்கான விருதை பி .வி . விக்னேஸ்வரன் தனது நினைவு நல்லது படைப்புக்காகவும்,கவிதைக்காக இளவாலை விஜயேந்திரன் தனது எந்த கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது? நூலுக்காகவும்,மொழியாக்கத்துக்காக ஜெகதீஷ் குமார் கேசவன் எ ஜனி த்ரோ வோர்ட்ஸ் (A Journey Through words ) நூலுக்காகவும்,பார்வதி கந்தசாமி இலக்கியம் மற்றும் சமூகப் பணிச்சாதனைக்கான சிறப்பு அங்கீகாரத்துக்காகவும்   பெற்றனர்.
 
கனடாவில் வாழும் கவிஞரும் பெரிதும் அறியப்பட்ட ஊடகவியலாளரும் பேராசிரியருமான டாக்டர் சேரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
 
அப்போது அவர் பேசியது ......
 
தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகளுக்கு என்ன சிறப்பு இருக்கிறது? அதற்கு என்ன மாண்பு இருக்கிறது? அதன் பின்னணியைச் சற்று நான் விளக்க வேண்டும்.எல்லோருக்கும் தெரியும் .இப்போது  விருதுகள் வழங்குவது, பட்டங்கள் வழங்குவது எல்லாம் இன்று குடிசைத் தொழில் போல் மாறிவிட்டன .யார் வேண்டுமானாலும் விருது வழங்கலாம் என்ற நிலை இருக்கிறது. அத்தகைய எல்லா விருதுகளையும் 'கிணற்றுத் தவளை விருதுகள்' என்றுதான் அழைக்க வேண்டும்.ஏனென்றால் கிணற்றுத் தவளைகளுக்குத் தனது கிணற்றை விட வேறு உலகம் தெரியாது.அவர்கள் தங்கள் நாட்டை வைத்து, ஊரை வைத்து, கிராமத்தை வைத்து விருது கொடுக்கலாம். ஆனால் ,தமிழ் என்பது இப்போது ஒரு நாட்டினுடைய எல்லைப் பரப்பில் குறுக்கிவிடக் கூடிய ஒரு மொழி அல்ல.தமிழ் என்பது நிலம் கடந்த மொழி.அந்த மொழியால் அமைந்தது தான் தமிழ்ப் பண்பாடும் வாழ்வும்.இந்த விருது மட்டும்தான் உலகத் தமிழ் விருதாக இருக்கிறது.சரியான தீர்க்கமான தெளிவான பார்வையோடு வழங்கப்படுகிற இந்த விருதுதான் பெருமைக்குரியது" என்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்