பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன்.. நீதிமன்றம் விதித்த முக்கிய நிபந்தனை..!

Mahendran
சனி, 21 செப்டம்பர் 2024 (12:27 IST)
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மனோ சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோடு பகுதியில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அவருக்கு சாகீர் மற்றும் ரபீக் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

செப்டம்பர் 10ஆம் தேதி இரவு, மனோவின் இரு மகன்களும் நண்பர்களுடன் தங்களது வீட்டின் முன்பு குடிபோதையில் நின்று பேசிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அருகில் சென்ற சிறுவன் உட்பட இரண்டு பேரை தாக்கியதாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, மனோவின் மகன்கள் மீது வளசரவாக்கம் போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களின் நண்பர்களான விக்னேஷ் மற்றும் தர்மாவை கைது செய்தனர். மனோவின் மகன்கள் தலைமறைவாக இருப்பதால், போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, மனோவின் மகன்கள் சாகீர் மற்றும் ரபீக் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், 8 பேர் கொண்ட ஒரு கும்பல் மோட்டார் சைக்கிள்களில் வந்து அவர்களை உருட்டு கட்டை மற்றும் கற்களை கொண்டு தாக்கியது பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, மனோவின் மனைவி ஜமீலா, தங்களுக்கும், தங்களது மகன்களுக்கும் எதிராளிகள் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் 8 பேரை தேடி வருகின்றனர், மேலும் அவர்களுக்கு எதிராக ஆயுதத் தாக்குதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், சிறுவன் உட்பட இரண்டு பேரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த மனோவின் மகன்கள், முன்ஜாமீன் கேட்டு சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது, அதில் ரபீக் மற்றும் சாகீர் இருவருக்கும் 30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், பூந்தமல்லி நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்